புதுச்சேரி

கொரோனா வைரஸ் காரணமாகப் புதுச்சேரியில் நாளை முதல் 144 ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகநாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.  இந்தியாவில் இதுவரை 298 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுத்து வருகின்றன.

நாளை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்குக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இதையொட்டி  நாளை மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் வரும் 31 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, “நாளை முதல் மார்ச் 31 வரை புதுச்சேரியில் கொரோனா பரவுவதைத் தடுக்க 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.  இதையொட்டி பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை காலை 8-9 மணி மற்றும் மாலை 6-7 மணி ஆகிய நேரங்களில் வெளி வந்து வாங்கிக் கொள்ளலாம்.

இந்த அவசர நிலை அறிவிப்பு காரணமாக மற்ற நேரங்களில் மிகவும் அவசரம் என்றாலொழிய வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது.  புதுச்சேரி வரும் கிழக்கு கடற்கரைச் சாலை வரும் 31 ஆம் தேதி வரை  முழுவதுமாக மூடப்பட உள்ளது” என அறிவித்துள்ளார்.