டில்லி

நாளை கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதால் தனது மேற்கு வங்க பயணத்தை ரத்து செய்துள்ளார்.

 

கொரோனா 2 ஆம் அலை இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.   உலக அளவில் கொரோனா பரவல் எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 3.14 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 1.59 கோடி பேர் பாதிக்கப்பட்டு 1.84 லட்சம் பேர் உயிர் இழந்து தற்போது 22.9 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று முன் தினம் மக்களிடையே உரையாற்றினார்.  அப்போது அவர், “ஊரடங்கு என்பது கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும்.   கட்டுப்பாட்டை பின்பற்றி மக்கள் நடந்து கொண்டால் ஊரடங்குக்குத் தேவை இருக்காது.

அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.  நாட்டின் பொருளாதாரம் பாதிக்காத வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் கொரோனா அதிகமாகப் பரவும் சூழல் குறித்து நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.    இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “நாளை உயர் மட்டக் குழுவுடன் தற்போதைய கொரோனா நிலை குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.  ஆகவே நான் நாளை மேற்கு வங்க தேர்டஹ்ல் பிரசாரத்துக்குச் செல்லவில்லை” எனப் பதிந்துள்ளார்.