டில்லி
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகத் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இந்த பாதிப்பு, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, டில்லி, ஆந்திரா, உபி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மிகவும் அதிகமாக உள்ளன.
இதில் டில்லியில் மட்டும் தினசரி பாதிப்பு 7 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. எனவே இங்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறும் போதிலும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.
இன்று டில்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளை கொரோனா பரவல் அதிகரிப்பால் மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டரிலும் வெளியிட்டுள்ளார்.