மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா அதிகரிப்பு காரணமாக வார இறுதி மற்றும் இரவு நேரங்களில் முழு அடைப்பு அமலுக்கு வருகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை இங்கு 29.53 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு இதில் 55,656 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 24.95 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது 4.01 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட 50000 ஐ நெருங்கி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதையொட்டி இன்று மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி இது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
அப்போது வார இறுதியில் முழு ஊரடங்கு மற்றும் வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு எனக் கடுமையான விதிகளுடன் ஊரடங்கை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
வார இறுதியில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு அமலாகிறது. இந்த ஊரடங்கு நேரங்களில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்றவை அனைத்தும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]