சட்டம் புகட்டமுடியாத புத்தி…  சாதித்துக் காட்டிய கொரோனா..

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பழக்கம் இது.  1979-லேயே நீதிமன்றம் தலையிட்டே கூட தடுத்து நிறுத்த முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஓர் அவலம்.  அப்படிப்பட்ட விஷயத்தில் இன்று இந்த கொரோனா வைரஸ் தந்த பயம் நிறுத்திக்காட்டியுள்ளது.

 அது, கான்ஸ்டபிள், கிரேட்-II காவலர்கள் போன்றோரைக் கொஞ்சமும் இரக்கமின்றி, காவல்துறையின் பெரிய பெரிய அதிகாரிகள் வீட்டில் எடுபிடிகளாகப் பயன்படுத்தி வரும் “ஆடர்லி” என்னும் கொடுமையான முறை.  ஆடர்லி என்பது உயரதிகாரிகள் வீட்டில் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், சமையல் வேலைகள் என்று முறைவாசல் செய்வது தான்.

2018-ல் கூட நீதிமன்றம் தமிழக அரசைக் கடுமையாகச் சாடியிருந்தது இந்த விசயத்தில்.  இருந்தாலும் கூட இந்த முறையைத் தடுத்து நிறுத்த முடியாமலேயே தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், கடந்த வாரம் 300-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 இந்த தொற்று விவகாரம்,  உயர் அதிகாரிகளுக்கு பெரும் கலக்கத்தை உண்டாக்கி விட்டது.  முக்கியமாக ஒரு டெபுடி கமிஷனரின் டிரைவர், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஒரு கன் மேன் ஆகியோருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது  பெரும் பீதியினை  இந்த தகவல்கள் கிளப்பிவிட, வைரஸ் தொற்று பயத்தில், இப்போது இவர்கள் அனைவருமே தங்களின் வீடுகளில் பணிபுரிந்த ஆடர்லிகளை திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.

தமிழகத்தில் சுமார் 60 ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் 250 ஐபிஎஸ் அதிகாரிகளின் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு ஆர்டலியாவது வீட்டுவேலை செய்து கொண்டிருப்பார்.  இவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 6500 பேர் வரை இருக்கும் என்கின்றனர் இது போன்ற ஆடர்லிகளாக இருப்பவர்கள்.  “மொத்தமுள்ள 1.24 லட்சம் பணியிடங்களில் தற்போது பணியிலிருப்பது 1.09 லட்சம் பேர் மட்டுமே.  இந்த நிலையில் இந்த ஆர்டர்லி பணியிலிருக்கும் 6500 பேரையும் காலியிடங்களில் நிரப்பினால் மற்றவர்களின் பணிச்சுமையாவது குறையும்.  இதில் ஓய்வுபெறும் வயதில் கூட இது போல ஆர்டர்லிகளாக சேவகம் செய்வோரும் அடக்கம்” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத ஓர் ஆடர்லி.

அதிலும் இப்போதெல்லாம் புதிதாக பணியில் சேரும் காவலர்கள் குறைந்தபட்சம் பட்டதாரிகளாகவாவது இருப்பதால் ஆர்டர்லி முறையினை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.  “ஐபிஎஸ் ஆபீசர்களுக்கு, அவர்களின் மனைவிகளுக்கு மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியில் இருப்பவர்களுக்கு என்றெல்லாம் சங்கங்கள்  இருக்கும் நிலையில் காவலர்களுக்கு சங்கம் இல்லாததால்தான் இதை போன்ற அவலங்களை தட்டிக்கேட்க முடிவதில்லை” என்று வேதனை தெரிவிக்கின்றனர் இவர்கள்.

காலனி ஆதிக்க கால ஒடுக்கு முறை இந்த வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பயத்தினாலாவது நீக்கப்பட்டால் நல்லது

– லெட்சுமி பிரியா