டில்லி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 20 கோடி பேருக்கு தலா ரூ.5000 வழங்க இந்தியத் தொழில் சம்மேளனம் மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது.
பேரிடர், பஞ்சம் போன்றவைகளால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் போது மக்களுக்கு நேரடி நிதி நிவாரணம் அளிக்கும் பழக்கம் பல நாடுகளில் உள்ளது. கடந்த 2008-09 ஆம் வருடம் அமெரிக்காவில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது மக்களுக்கு நேரடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பழமையான ஒரு வழக்கமாகும்.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பலரும் வீட்டில் இருந்து பணி புரிய வேண்டும் என்னும் உத்தரவால் பல பணியகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் குறைந்த ஊதியம் பெறுவோர் தினக்கூலி தொழிலாளர்கள் போன்றோர் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளனர். பலருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி முழுவதுமாக குறைந்ததால் பொருளாதாரத்தில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வு நடத்திய மத்திய தொழில் சம்மேளனம், “கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல தொழிற்சாலைகள் மற்றும் பணியகங்கள் மூடப்பட்டுள்ளதால் பலர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இதனால் இந்தியப் பொருளாதாரத்தில் கடும் சரிவு உண்டாகி வருகிறது. எனவே தற்போது ஒரு முறை உதவியாக இந்த மக்களுக்கு ரொக்க உதவி அளிக்க வேண்டியது அவசியமாகி உள்ளது.
ஜிடிபி யின் தற்போதைய மதிப்பில் 1% ரூ. 2 லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது. அதை ஆதாரின் அடிப்படையில் துயருறும் மக்களுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருட வருமானம் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள் தற்போது 20 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு முறை உதவியாகக் குறைந்தது ரூ.5000 வழங்க வேண்டும். இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.10000 வழங்கலாம்.
எண்ணெய் விலையில் ஒவ்வொரு 10 டாலர் வீழ்ச்சியின் மூலம் எண்ணெய் இறக்குமதி செலவில் 1500 கோடி டாலர் குறையும். தற்போது கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் தொகையை இந்த உதவித் தொகை வழங்கப் பயன்படுத்தலாம், இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிப்பதால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் அடையும்.
இதைத் தவிர அடித்தட்டு மக்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான ரேஷன் பொருட்களை மாநில அரசுகள் மூலம் இலவசமாக வழங்கலாம். இதன் மூலம் தினக்கூலி தொழிலாளர்கள் பெருமளவில் பயன்பெறுவார்கள், நடுத்தர மக்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் வரி குறைப்பு நடவடிக்கைகள் மூலம் பயன் அளிக்கலாம்” எனப் பரிந்துரை அளித்துள்ளது.