ராயகடா
ஒரு தவறான வீடியோ பகிர்வால் ஒடிசாவில் உள்ள ஒரு கிராம மக்கள் கொரோனா தடுப்பூசிக்குப் பயந்து ஊரை விட்டே ஓடி உள்ளனர்.
நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கிராமப் பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் ஒடிசாவில் தற்போது 54.34 லட்சம் 45 வயதைத் தாண்டியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இவர்களில் 11.23 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர்.
இதைத் தவிர 9.68 லட்சம் 18 – 44 வயது உடையோர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வரவில்லை. ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் உள்ள சம்பகனா மாவட்டத்தில் 500 பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக 100 டோஸ் தடுப்பூசிகள் எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் அந்த கிராமத்தில் நான்கைந்து பேர் மட்டுமே இருந்துள்ளனர்.
அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்துள்ளனர். இது குறித்து விசாரித்த போது சமீபத்தில் அந்த கிராமத்தில் வெளியான வீடியோவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 2 மணி நேரத்தில் உயிர் இழந்து விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதை நம்பி மக்கள் கிராமத்தை விட்டே ஓடிச் சென்றுள்ளனர்.
இதையொட்டி அந்த பழங்குடியின மக்களின் தலைவரை வரவழைத்து தடுப்பூசி முகாம் தலைவர் ஷைலஜா பேசி உள்ளார். மூன்று மணி நேர விளக்கத்துக்குப் பிறகு அவர் ஒப்புக கொண்டுள்ளார். ஆயினும் மூன்று பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் பல சிற்றூர்களில் இதே நிலை தென்படுவதாக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.