சென்னை
தற்போதைய 15 நாள் ஊரடங்கால் தமிழகத்தில் சுமார் ரூ.2900 கோடி இழப்பு உண்டாகும் எனவும் இதனால் மதுபான விலை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 33,658 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 15,65,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17,359 பேர் உயிர் இழந்து 13,39,887 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது 2,07,789 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் கொரோவை கட்டுப்படுத்த மே 10 முதல் 15 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு விதிகளை மக்கள் சரிவரப் பின்பற்றாததால் தற்போது ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அனைத்து வர்த்தக மற்றும் தொழிலக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
இதனால் தமிழகத்துக்கு சுமார் 2900 கோடி வருவாய் இழப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வருவாய் இழப்பால் எதிர்கால செலவினங்களில் கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மே 24க்கும் பிறகும் இந்த ஊரடங்கு நீடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மேலும் வருவாய் இழப்பு ஏற்படக் கூடும்.
எனவே இந்த எதிர்கால செலவினங்களுக்கான நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கத் தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரலாம். குறிப்பாக டாஸ்மாக் மதுபான விலையை ஏற்றுவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, அவர்கள் கடந்த ஓராண்டாக மதுபான விலை உயரவில்லை என சுட்டிக்காட்டி உள்ளனர்.