டில்லி

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க விதித்திருந்த கெடுவைச் செப்டம்பர் 30 வரை அரசு நீட்டித்துள்ளது.

பான் எண் என்பது வருமான வரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் கணக்கு எண்ணாகும்.  இந்த எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.    இது குறித்து வெளியிடப்பட்ட நிதி மசோதாவில் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்காவிடில் ரூ. 1000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் ஆதார் இணைப்பு குறித்த காலக் கெடுவுக்குள் முடியாததால் வரி செலுத்துவோர் இதற்கான இறுதித் தேதியை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர்.   இதையொட்டி இந்த இறுதி தேதி பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதன்பிறகு கொரோனா தொற்று காரணமாக மேலும் நீட்டிக்கப்பட்டது.

சமீபத்திய நீட்டிப்பின்படி ஆதார் மற்றும் பான் எண் இணைப்புக்கு  ஜூன் 30 இறுதி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு நாட்டின் பல இடங்களில் இன்னும் குறையாமல் உள்ளதால் இந்த கெடு மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டு தற்போது இறுதி தேதியாக செப்டம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.