துபாய்: ஏழை மக்களின் பசியை போக்க இலவச ரொட்டி வழங்கும் எந்திரத்தை துபாய் அரசு நிறுவி உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த நற்செயலுக்கு, பங்களிப்பாளர்கள் எங்கிருந்தாலும் இயந்திரத்திற்கு நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது தாங்களாகவே ஒன்றை அமைக்கலாம் என துபாய் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரில் அனைவருக்கும் ரொட்டி’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில், எந்த ஒரு ஏழையும் பசியில் தூங்கக் கூடாது என்பதின் முதல் முயற்சியாக, ஒரு நிமிடத்திற்குள் சூடான ரொட்டியைத் தயாரித்து வழங்கும் இயந்திரங்கள் துபாய் முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.  துபாயில், இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் பல ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள் உள்பட பல வேலைகளில் பணி செய்து வருகின்றனர். இவர்களில் பலர், பட்டினியால் வாடும் சூழல் ஊள்ளது. இதுபோன்ற சூழலை தவிர்க்கும் வகையில், துபாய் அரசு இலவச ரொட்டி வழக்கும் இயந்திரங்களை பொருத்தி உள்ளது.

முதல் முயற்சியாக, வெளிநாட்டுத் தொழிலாளர்கள், உணவு டெலிவரி செய்பவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆதரவற்ற குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த தொண்டுக்கு, பொதுமக்களும் நிதி உதவி செய்யலாம் என்று துபாய் அரசு தெரிவித்துள்ளது.  மக்கள் நேரடியாக இந்த உணவு இயந்திரம் மூலமாகவோ, இணையதளம் வழியாகவும் , துபாய் நவ் ஆப் மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ நன்கொடை அளிக்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதுமையான சமூக தொண்டு முயற்சியானது பல்வேறு மக்களிடம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் என்றும்,  இந்த நல்ல முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து அனைத்து இடங்களிலும் இந்த முயற்சியை விரிவுபடுத்தப்படும் என நம்புகிறோம் என துபாய் அரசு தெரிவித்து உள்ளது.