உயிர் இழந்தவரின் உடலில் தோன்றிய புழுக்களை வைத்து இறந்த நேரத்தை கணித்த துபாய் நிபுணர்கள்

Must read

துபாய்

யிர் இழந்தவரின் உடலில் தோன்றிய புழுக்களை வைத்து ஒருவர் 63 மணி 30 நிமிடங்களுக்கு முன் இறந்ததைத் துபாய் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒருவர் மரணமடைந்தால் அவர் மரணம் அடைந்த நேரம் என்ன என்பதை சரியாகக் கண்டுபிடிப்பது அவசியமாகும்.   குறிப்பாக கொலை, தற்கொலை, விபத்து ஆகிய வகையில் மரணம் நேரும் போது காவல்துறை விசாரணைக்கு இது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.  துபாயில் தடய அறிவியல்  நிபுணர்கள் தற்போது ஒருவர் மணம் அடைந்த நேரத்தை துல்லியமாகக் கணித்துள்ளனர்.

துபாய் காவல்துறை தடய அறிவியல் மற்றும் குற்றவியல்  பொதுப் பிரிவு இயக்குநர் அகமது ஈத் அல் மன்சூரி செய்தியாளர்களிடம்,

“குற்றவியல் வழக்குகளில் தடய அறிவியல் பிரிவின் அறிக்கை மிகவும் முக்கியமான சாட்சியமாக உள்ளது.  குறிப்பாகக் கொலை வழக்கு அல்லது விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டு அது குறித்து எழும் சந்தேகங்களுக்குத் தடய அறிவியலே முக்கியமான வழிகாட்டியாக உள்ளது.  அதிலும் கொலை வழக்குகளில் நீண்ட நாட்களுக்கு முன் இறந்தவர்களின் உடல் கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் அவர் எப்போது இறந்தார்? இறந்து எத்தனை மணி நேரம் அல்லது நாட்களாகி இருக்கும்? என்பதை அறிவது குற்றப்புலனாய்வு விசாரணையில் முக்கிய கட்டமாகும்.

இத்தகைய நேரத்தில் ஒரு உடல் அல்லது உடல் பாகம் வீசப்பட்டு இருக்கும் பகுதியில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை ஆய்வு செய்தால் மிகத் துல்லியமாகக் கொலை செய்யப்பட்ட அல்லது ஒரு நபர் இறந்து எத்தனை நாட்கள் ஆனது என்பதைக் கண்டுபிடித்து விட முடியும்.  இறந்த அல்லது துண்டிக்கப்பட்ட உடல் பாகங்களில் முதலில் லார்வா எனப்படும் சிறிய புழுக்கள் தோன்றுகின்றன. அதன் பிறகு அந்த லார்வாக்கள் வளர்ந்து பூச்சிகளாக மாறிவிடுகிறது.

இவ்வாறு குறிப்பிட்ட பூச்சியின் லார்வா(புழு) அல்லது முழு உருப்பெற்ற பூச்சியை ஆய்வு செய்தால் அது தோன்றி எத்தனை நாட்களாகி இருக்கும் என்பது தெரிய வரும்.  அதைப் போல் ஆய்வகத்தில் இதற்கு முன்னோட்டமாகச் செய்யப்பட்ட சோதனையில் எலி போன்ற உயிரினங்கள் இறந்து அதில் தோன்றும் பூச்சி மற்றும் புழுக்களை ஆய்வு செய்து அதில் துல்லியமான முடிவுகள் பெறப்பட்டது.

சமீபத்தில் துபாய் காவல்துறையின் தடய அறிவியல் பிரிவு நிபுணர்கள் முக்கிய வழக்கு ஒன்றில் பூச்சிகள் மற்றும் புழுக்களை வைத்து தீர்வு கண்டுள்ளனர்.  இதன் மூலம் யாரும் வசிக்காத கட்டிடத்தில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தில் இருந்து இறந்தவர் உயிரிழந்து சரியாக 63 மணி 30 நிமிடம் ஆனதாக துல்லியமாக முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்”

எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article