சென்னை: சிறைக் கைதிகளுக்கு எதற்காக கை கால் முறிவுகள் ஏற்பட்டன என்று அவர்களைக் கைதுசெய்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பொதுவாக, இந்திய சிறைகளில் செல்வாக்கற்ற கைதிகளின் மீது மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாக புகார்கள் உண்டு. பல கைதிகளுக்கு மர்மமான முறையில் கை கால் முறிவுகள் ஏற்படுகின்றன.
தப்பி ஓடும்போது கீழே விழுந்து அப்படி நேர்கின்றன என்ற விளக்கம் காவல்துறை தரப்பில் பொதுவாக கொடுக்கப்பட்டாலும், காவல்துறையினர் திட்டமிட்டே இப்படி செய்துவிடுகின்றனர் என்று குற்றச்சாட்டு உண்டு.
எனவே, அப்படியான விபத்துகளுக்கு உள்ளான கைதிகளை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உத்தரவிடப்பட்டது.
எனவே, அந்த வகையில், தமிழக அளவில் மொத்தம் 225 கைதிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு நிகழ்ந்த விபத்துக்களுக்கான காரணம் குறித்து, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களிடம் துணைக் கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.