நாகையில் பெண் உதவி காவல் ஆய்வாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி, இன்று பணி ஓய்வு பெறவிருந்த டி.எஸ்.பி வெங்கட்ராமன் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாகையில் நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் வெங்கட்ராமன். இவர் கடந்த 2015ம் ஆண்டு திருச்சியில் காவல்துறை நுண்ணறிவுப் பிரிவில் உதவி ஆணையராக பணியாற்றி வந்தார். அப்போது பெண் உதவி காவல் ஆய்வாளரிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. செல்போனில் ஆபாசமாக பேசியதாகவும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகவும் அந்த பெண் உதவி ஆய்வாளர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர் நாகர்கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் நாகையில் பணியாற்றி வந்த அவர், இன்றுடன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். டி.ஜி.பி திரிபாதி உத்தரவின்பேரில் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வெங்கட்ராமனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.