ஐதராபாத்:

ரொக்க பற்றாகுறை காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஏடிஎம்.கள் செயலிழந்து காணப்ப டுகின்றன. மகாராஷ்டிரா, கேரளாவில் இருந்து ரொக்கத்தை வரவழைக்க வேண்டிய கட்டாய நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாகவே இந்த இரு மாநிலங்களிலும் ரொக்கத்திற்கு பற்றாகுறை நிலவி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, கேரளாவில் இருந்து தெலங்கானாவுக்கு ரொக்கம் கொண்டு வர வங்கிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல் ஒடிசா, தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு ரொக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு முதல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வழங்குவதில் பற்றாகுறை நிலவுகிறது. அதோடு வாடிக்கையாளர்கள் இந்த ரூபாய் நோட்டை திருப்பி கொண்டு வந்து செலுத்துவதில்லை. இதனால் கடும் பற்றாகுறை நிலவுகிறது.

இது குறித்து எஸ்பிஐ ஐதராபாத் வட்டார தலைமை பொது மேலாளர் சுவாமிநாதன் கூறுகையில், ‘‘ஆர்பிஐ அனுமதியுடன் மகாராஷ்டிரா, திருவனந்தபுரத்தில் இருந்து ஐதராபாத்துக்கு ரொக்கம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் ஏடிஎம், வங்கி கிளைகளில் ஏற்பட்ட ரொக்க பற்றாகுறை சரி செய்யப்பட்டது. இது இந்த மாதம் இன்னும் செய்யவில்லை.

ஏடிஎம்.களில் 94 சதவீதம் பணம் இருக்கும் வகையில் பராமரிக்கப்படுகிறது. பணமதிப்பிழப்புக்கு பின்னர் ஏடிஎம்.களில் 85 சதவீதம் பணம் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டோம். இது கடந்த ஜனவரியில் 70 சதவீதமாக குறைந்தது. தற்போது 60 சதவீதத்தை எட்டியுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பி வங்கி டெபாசிட்டுக்கு வருவதில்லை. இதனால் எங்களிடம் குறைந்தளவு தான் 2,000 ரூபாய் நோட்டுக்கள் இருப்பு உள்ளது.

இன்றும், நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை. சனிக்கிழமை வழக்கம்போல் வங்கிகள் செயல்படும். ஏப்ரல் 2ம் தேதி ஆண்டு இறுதி என்பதால் அன்று வங்கிக்கு விடுமுறை. அதனால் ஏடிஎம்.களில் விரைந்து பணம் காலியாகும் நிலை உள்ளது’’ என்றார்.