துபாய்
காதலனை குடிபோதையில் கத்தியால் குத்திக் கொன்று அந்த பிணத்துடன் இரவைக் கழித்த ரஷ்யப்பெண்ணுக்கு 15 வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
துபாயில் வசிக்கும் ரஷ்யப்பெண் சிறு தொழிலதிபர் தனது பாலஸ்தீனிய காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அந்த காதலர் இந்தப் பெண்ணிடம் இருந்து பலமுறை பணம் வாங்கி மொத்தம் 130000$ வரை பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் தனது காதலர் வேறொரு பெண்ணை மணந்துள்ளதாகவும், தன்னிடம் பணத்துக்காக மட்டுமே பழகுவதாகவும் பலமுறை சண்டை இட்டு இருக்கிறார். இது அந்த காதலரின் நண்பர்கள் முன்பும் நடந்துள்ளது.
சம்பவத்தன்று இருவரும் சண்டையிட்டு விட்டு, தனித்தனியே பாருக்கு சென்று மது அருந்தியுள்ளனர். பிறகு வீட்டுக்கு வந்த ரஷ்யப் பெண் தன் காதலனுக்காக போதையில் காத்திருந்துள்ளார். காதலன் வந்ததும் அவரிடம் மீண்டும் சண்டையிட துவங்கி உள்ளார். சண்டை வலுக்கவே, ஒரு கட்டத்தில் அங்கிருந்த சுமார் 9” நிளமுள்ள கத்தியை எடுத்து தன் காதலரை மூன்று முறை குத்தியுள்ளார். காதலர் மரணமடைந்து விட்டார்.
அதன் பின் அந்தப் பெண் அழுதபடி தனது காதலனின் நெஞ்சில் சாய்ந்து உறங்கி இருக்கிறார். பின் காலையில் அவரே போலிசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலிசிடம் காதலர் தன்னை கொல்ல வந்தபோது தற்காப்புக்காக கத்தியால் குத்தியதில் அவர் மரணமடைந்ததாக பொய் சொல்லி விட்டார். சந்தேகத்தில் பேரில் அந்தப் பெண்ணை கைது செய்து புலன் விசாரித்ததில் கொலையை இவர்தான் செய்துள்ளார் என்பது உறுதியானது.
காதலரின் சிரியாவை சேர்ந்த ஒரு நண்பரும், ஜோர்டானை சேர்ந்த மற்றொரு நன்பரும் கொலையை இந்தப் பெண் செய்திருக்கக் கூடும் என உறுதிபடுத்தினர். அவர்களுடன் தான் அந்தக் காதலர் இறக்கும் முன்பு பேசியுள்ளார். விசாரணையின் அடிப்படையில் பெண்ணுக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது. அவர் பலமுறை மேல் முறையீடு செய்தும் அனைத்து முறையீடுகளும் அவர் தண்டனையை உறுதி செய்தன.
இறுதி முறையீட்டில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. அதில் ரஷ்யப்பெண்ணுக்கு தண்டனை குறைக்க முடியாது எனவும் அவர் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து ஆகவேண்டும் எனவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சிறைத்தண்டனை முடிந்தபின் அவர் துபாயை விட்டு வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.