எடின்பர்க்,

குடிபோதையில் விமானத்தை இயக்க  முயன்ற விமானியை போலீசார் கடைசிநிமிடத்தில் கைதுசெய்தனர். இதனால் 150 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.

ஸ்காட்லாந்திலிருந்து அமெரிக்காவின் நியூஜெர்ஸிக்கு  முழு போதையில் விமானம் இயக்க முயன்ற விமானியை, போலிசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் கார்லோஸ் ராபர்டோ லிகோனா. இவர் United Airlines நிறுவனத்தில் விமானியாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஸ்காட்லாந்திலிருந்து நியூஜெர்சிக்கு செல்லும் விமானத்தை இயக்க இவர் வந்தார். 141 பயணிகள் அதில் இருந்தனர். விமானத்தில் ஏற முயன்ற கார்லோஸ் அதிகமான குடி போதையில் இருந்தது தெரியவந்தது.

தான் குடிக்கவே இல்லை என்று போலீசாரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து போலீசார், அவரது ரத்தத்தை எடுத்து சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட 7 மடங்கு அதிகம் அவர் குடித்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கார்லோஸூக்கு அந்நாட்டு நீதிமன்றம் பத்து மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன் போதையில் விமானம் ஓட்ட முயன்றதால்  அவர் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.