சென்னை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகம் முன்பு மது போதையில் இங்கிலாந்து நாட்டு ராணுவ அதிகாரி மக்களைக் கடித்துத் தாக்க முயன்றுள்ளார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர், மது போதையில் பொதுமக்களிடம் தகராற்றில் ஈடுபட்டு அவர்களைக் கடிக்க முயன்றுள்ளார் அவரைப் பொதுமக்கள் தட்டிக்கேட்டபோது, கடும் ரகளையில் ஈடுபட்டார்.
எனவே அவரை பிடித்து கைகளைக் கட்டி ஆட்டோ ஒன்றில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அந்த நபர், ஆட்டோவில் ஏறாமல் பொதுமக்களிடம் தகராற்றில் ஈடுபட்டார். இந்தத் தகவலறிந்த அண்ணாசாலை காவலர் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் இருந்து வெளிநாட்டு வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர்.
தகராறு செய்த்ஹ வெளிநாட்டு நபருடன் வந்த சக வெளிநாட்டினர்,
‘நாங்கள் இங்கிலாந்து நாட்டின் ராணுவ அதிகாரிகள், நாங்கள் தற்போது எண்ணூர் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் தங்கி பணியாற்றி வருகிறோம். ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தைச் சுற்றிப் பார்க்க, சக அதிகாரி ஜே.எல்.வில்லிஸ் உடன் 25 பேர் வந்தோம். வந்த இடத்தில் அவர் அதிகளவில் மது அருந்தியதால் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது’
என்று கூறினர்.
அண்ணாசாலை காவல்துறையினர் சம்பவம் குறித்து தங்கள் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர். பிரச்சினை செய்த இங்கிலாந்து நாட்டின் ராணுவ அதிகாரி வில்லிஸை சக ராணுவ அதிகாரிகளுடன் காவல்துறையினர் செல்ல அனுமதித்து அவர்கள் பத்திரமாகச் செல்ல எண்ணூர் செல்லும் மாநகரப் பேருந்தில் அனுப்பி வத்தனர். ராயப்பேட்டை வணிக வளாகம் அருகே நடந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.