சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வீட்டுக்கு குண்டு வைக்கப்போவதாக மர்ம நபர், குடி போதையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது. பேசியவர், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கும் கோபாலபுரம் வீட்டுக்கும் குண்டு வைக்கப்போவதாக தெரிவித்தார். காவல்துறையினர் அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

இந்த மர்மபோனை அடுத்து ராயப்பேட்டை மற்றும் தேனாம்பேட்டை காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உஷார் படுத்தப்பட்டது. அந்த போதை நபர் பேசிய அலைபேசி எண்ணை வைத்து, அவரது முகவரி மற்றும் அவர் அந்த போனி்ல் இருந்து யார்யாரிடம் பேசினார் என்ற போன் ஹிஸ்டரி ஆகியவை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

அந்த மர்ம நபர் காஞ்சிபுரத்தில் இருந்து பேசியதாக தெரியவந்ததால், தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

ஏற்கெனவே எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலினுக்கு காவல் பாதுகாப்பு உள்ளது. தற்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.