கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களாக நாடு முழுவதும் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று ஊரடங்கில் சில தளர்வு கொடுக்கப்பட்டு, சில மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.
40 நாட்களாக மதுபானங்களை கண்ணில் காணாமல் திண்டாடி வந்த குடி மகன்கள், அரசு அளித்த தளர்வு காரணமாக அண்டை மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் நேற்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது.

மதுபாட்டில்களை வாங்க ஆர்வம் கொண்ட குடிமகன்கள் நேற்று காலை முதலே மதுபானக் கடைகளில் குவிந்தனர். சில இடங்களில் மதுபானம் வாங்க வந்தவர்களை மலர் தூவி கடை உரிமையாளர்கள் வரவேற்ற நிலையில், பல இடங்களில் சமூக விலகல் இல்லாமல் மதுபானத்தை வாங்கியதும், ஒருசில இடங்களில் ஒரு பர்லாங் தூரம் வரை கியூவில் நின்று  மதுபானங்களை வாங்கிச் சென்ற நிகழ்வுகளும் அரங்கேறின.
மது பாட்டில்  வாங்கிய  சந்தோஷத்தில் பலர் துள்ளிக்குதித்து ஆடிய சம்பவங்களும் நடந்தேறின. ஏரளமானோர் கைகளில் மதுபாட்டில் கிடைத்ததும் அவர்களின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் வெளிச்சம் தென்பட்டது.
மதுபானங்களை வாங்கியவர்களில் ஒருவரும் ஒன்று இரண்டு வாங்காமல் பலர் கைகள் நிறைய பாட்டில்களை அடுக்கிச் சென்ற காட்சிகளும் தென்பட்டன. பலர் தாங்கள் கொண்டு வந்த பைகளை நிரம்பிச் சென்றதும், பலர் பெட்டிப் பெட்டியாக வாங்கிச் சென்ற நிகழ்வுகளும் அரங்கேறின.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில்  ரூ.95 ஆயிரத்துக்கு மதுபானம் வாங்கிய ரசீது ஒன்று வைரலாகி வருகிறது. முன்னதாக, பெங்களூருவில் 52 ஆயிரத்துக்கு ஒரே  நபர் மதுபானம் வாங்கி அந்த ரசீது வாட்ஸ்ஆப் உள்பட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,
இது என்ன ஜுஜுபி… எனது பில்லைப் பாருங்கப்பா என ஒருவர் தான் வாங்கிய ரூ.95ஆயிரத்துக்கு மதுபானங்கள் வாங்கிய பில்லை பதிவிட்டுள்ளார். அதில் வாங்கப்பட்ட இடம் குறித்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த பில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்வுகள் சர்ச்சையும் கிளப்பி உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியர்கள் மதுவுக்கு அடிமையானவர்கள் என்ற எண்ணத்தை உலக நாட்டு மக்களின் மனதில்பதியச்செய்து விடும் என வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
அதே வேளையில் நமது மக்களோ,  ஒரே நபருக்கு எப்படி இவ்வளவு ரூபாய்க்கு மது விற்பனை செய்வது என்றும், இது விதிகளை மீறிய செயல் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மதுபானங்களை வாங்க நேற்று காத்திருந்த கூட்டத்தை  ஒருபுறம் மீடியாக்கள் வெளிச்சம்போட்டு காட்ட, மற்றொரு புறம் இதுபோன்ற பில்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.