சென்னை: போதைபொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்தை சென்னை காவல்துறை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. இதுதொடர்பாக வரவேற்பும், கண்டனங்களும் எழுந்துள்ளன.

சென்னையின் மூலை முடுக்கு மட்டுமின்றி, கூவத்தின் கரையோரமும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பூங்காக்களிலம் போதைபொருள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களே இந்த செயலில் ஈடுபடுவதால், அவர்களை கைது செய்ய காவல்துறை முன்வருவது இல்லை. இந்த நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீகாந்த் கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஸ்ரீகாந்த் ரொம்ப பாவம், தெரியாமல் சிக்கிக்கொண்டார் என தெரிவித்துள்ளார். அதுபோல நடிகரும், படத்தயாரிப்பாளருமான விஜய் அண்டனி திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் ரொம்ப காலமாகவே உள்ளது என்று அம்பலப்படுத்தி உள்ளது.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தியதன் மூலம், திடீரென முருகபெருமான் மீது அக்கறை வந்துள்ளது. தேர்தல் வருவதால், மாநாடு நடத்தி இருக்கிறார்கள். ஆண்டுதோறும் இதுபோன்ற மாநாடுகள் நடத்துவார்களா? தேர்தலில் வாக்குகள் வரவில்லை என்றால் நடத்தமாட்டார்கள். ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் எங்களின் பண்பாடு, செல்வம். எங்களின் உடன்பிறந்தவர்கள். அதனை வளர்த்தல் என்பது ஒரு தொழில் அல்ல. அது எங்களின் வாழ்க்கை முறை, விவசாயத்தின் நீட்சி. ஆடு, மாடுகளுக்கு பேசும் திறன் இல்லாததால், அவற்றுக்காக நான் பேசுகிறேன். அதற்காகத்தான் ஜூலை 10-ந் தேதி மதுரையில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடு, மாடுகள் மாநாடு நடக்கிறது. அவற்றின் உரிமைக்காகவே இந்த மாநாடு நடத்த இருக்கிறேன் என்றார்.
மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைதாகி இருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை நன்றாக தெரியும். ரொம்ப பாவம் அவர். இது என் கருத்து. திரையுலகில் நிறைய பேர் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள். புகழ்பெற்றவர்கள் கூட பயன்படுத்து கிறார்கள். அவர் தெரியாமல் சிக்கிக்கொண்டார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன்.
தமிழ்நாட்டில், அதிகாரங்களுக்கு தெரியாமல் இந்த போதைப்பொருள் வராது. திரையுலகில் மட்டுமல்ல, கல்லூரி, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்களில் கூட கஞ்சா, கொகைன், அபின் போன்ற போதைப்பொருட்கள் நீண்ட நாட்களாக விற்கப்படுகின்றன. அரசு நினைத்தால், போதைப்பொருள் ஒழிக்கப்படும். ஸ்ரீகாந்த் புகழ் பெற்ற நடிகர் என்பதால், அந்த செய்தி வெளியாகி வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. நடிகர் கைதானதால், போதைப்பொருள் ஒழிந்துவிட போகிறதா? என எதிர்க்கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில், விஜய் ஆண்டனியின் 12வது திரைப்படமான ‘மார்கன்’ டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன்.27) வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் அண்டனியிடம் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறியவர், , “சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல. பல நாட்களாகவே போதைப்பொருள் பயன்பாடு உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். இந்த விஷயத்தில் நடிகர் ஸ்ரீகாந்தை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், விசாரணை நடைபெறுகிறது. அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளார்.
திரையுலகில் பெரும்பாலான நடிகர்கள் பங்கேற்கும் விழாக்கள் மற்றும் படத்தின் வெற்றி விழாக்களில் போதைபொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், நடிகர்கள் தனுஷ், அனிருத் உள்பட பல படத்தின் விழாக்களில் போதை பொருள் உட்கொண்டு அவர்கள் ஆடிய ஆட்டம் தொடர்பான எத்தனையோ புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியானதே. அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை, அப்பாவி நடிகரான ஸ்ரீகாந்தை மட்டுமே கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது என சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.