கோவை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கோவை முழுவதும் போதை பொருள் சப்ளை செய்து வந்த சுந்தராபுரம் சேர்ந்த ஷகில் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 10 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருள் சப்ளை கும்பல் செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் குவிந்து வருவதால், மாவட்டம் தோறும் காவல்துறையினர் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பதில் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை பகுதியில் ஒரு கும்பல் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருள் சப்ளை செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவை சுந்தராபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த கும்பலை தேடும் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கோவை குனியமுத்தூரை அடுத்து சுகுணாபுரம் பகுதியில் ஒரு கும்பல் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குனியமுத்தூர் காவல் துறையினர் மூன்று பேர் கொண்ட கும்பலை பிடித்து சோதனை நடத்தினர்.இதில் அவர்கள் போதை பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. காவல்துறை அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கோவை ஈச்சனாரி சீனிவாச நகரை சேர்ந்த ஹரிஹரன், மனோஜ் குமார், குறிச்சி ஹவுசிங் யூனிட் சேர்ந்த மிதுஷ் என தெரிய வந்தது. அவர்களை கைது செய்து காவல்துறை அவர்களிடம் இருந்து 10 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சுந்தராபுரத்தில் இருந்து மதுக்கரை செல்லும் சாலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் போதைப் பொருள் விற்பனை செய்வது தெரிய வந்தது. இதைஅடுத்து, காவல் துறையினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் விரைந்து சென்று அங்கு விற்பனை செய்ய வைக்கப்பட்டு இருந்த 9.4 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கோவை சுந்தராபுரம் சேர்ந்த ஷகில் என்பவரை கைது செய்தனர்.