டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் நண்பரான இயக்குனர் அமீர், போதை பொருள் தடுப்பு துறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவரிடம் சுமார் 11 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. மீண்டும் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் டெல்லியில் பிடிப்பட்டது. இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த கடத்தலின் முக்கிய புள்ளியான திமுக அயலக அணியின் துணை அமைப்பாளரான ஜாபர் சாதிக் என்பவர் இருப்பது தெரிய வந்தது. அவர் தலைமறைவான நிலையில், சில நாட்களில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், போதை பொருட்கள் தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளுக்கு, உணவு பொருட்களுடன் சேர்த்து அனுப்பி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போதை பொருள் தடுப்பு துறையினர் சிறையில் அடைதுள்ளனர். இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்தசிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜாபர் சாதிக்கின் தம்பி உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.
மேலும், போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்தவர்களை போதைப்பொருள் தடுப்பு துறை விசாரித்து வருகிறது. ஜாபர் சாதிக், இயக்குனர் அமிரை வைத்து படம் தயாரித்து உள்ளதுடன், அமிருக்கு உணவகம் உள்பட பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார். மேலும், அவர் தயாரித்த படத்தை, அமைச்சர் உயதநிதியின் மனைவி கிருத்திகாவை வைத்து புரோமோட் செய்ததும் தெரிய வந்தது. மேலும், ஜாபர் ஆளும் தரப்புக்கு நெருக்கமாக இருந்து தனது கடத்தல் பணிகளை திறமையாக கையாண்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, இயக்குனர் அமீர் உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு துறை விசாரணைக்கு அழைத்தது. அதனப்டி, இயக்குனர் அமீர் நேற்று (ஏப்ரல் 2ந்தேதி) காலை டெல்லியில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆஜர் ஆனார். காலை 9 மணி அளவில் வந்த அவரிடம் பகல் 12 மணி அளவில் விசாரணை தொடங்கப்பட்டது. பின்னர் உணவு இடைவெளைக்கு பின்னர், அதிகாரிகளின் விசாரணை நள்ளிரவு வரை தொடர்ந்தது. சுமார் 11 மணி நேரம் என்.சி.பி. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது, ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் உடனான தொடர்பு எப்படி ஏற்பட்டது என அமீரிடம் என்.சி.பி. அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இயக்குனர் அமீரின் செல்போனை முழுவதுமாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இயக்குனர் அமீர் அளித்த வாக்குமூலத்தை முழுவதுமாக வீடியோ பதிவு செய்த அதிகாரிகள், அமீர் அளித்த வாக்குமூலத்தையும், ஜாபர் சாதிக் அளிக்க வாக்குமூலத்தையும் முழுவதுமாக ஒப்பிட்டு பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து விசாரணையில் இருந்து வெளியேறிய அவரிடம், தேவைப்படும் பட்சத்தில் மறு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்.சி.பி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.