சென்னை: போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, போதைப்பொருள் நடவடிக்கையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போதைப்பொருளுக்கு அடிமையாகி வரும் நிலை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கண்காணித்து வேட்டையாடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக,  கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை செய்ததில் சுமார் 1,700 கிலோ மெப்பட்ரோன் என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக டெல்லியிலிருந்து ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு 50 கிலோ போதைப் பொருளை கடத்த முயன்ற 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து மாவு உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதாகக் கூறி போதைப் பொருளை கடத்தியுள்ளனர். இதற்கு மூளையாக செயல்பட்டவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த திமுக பிரமுகர் ஜாபர் சாதிக் என்பதும் தெரிய வந்தது. இவர் திமுகவின் ன் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்து வந்துள்ளார். மேலும் பல திரைப்படங்களையும் தயாரித்து வந்துள்ளதும், கடந்த 3 ஆண்டுகளாக இவர் போதைபொருள் கடத்தலில் தீவிரமாக இறங்கியதும்  தெரிய வந்தது. இதனையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு தலைமையக அதிகாரிகள் சென்னை மண்டல அதிகாரிகளோடு சேர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த கும்பல், தேங்காய் பொடி மற்றும் ஊட்டச்சத்து பவுடருடன் சூடோ பெடரின் எனப்படும் போதை பொருளை கலந்து நூதனை முறையில் அவர்கள் கடத்த முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த கும்பல் கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியை மையமாகக் கொண்டு வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளது.

இதுவரை சுமார் 3,500 கிலோ சூடோ பெடரின் போதை பொருளை கடத்தியிருப்பது விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது. இதன் சர்வதேச மதிப்பு 2,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டது யார்? என சிக்கிய மூவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்தன.

இவர்,  நடிகை கயல் ஆனந்தி நடித்து வரும் மார்ச் ஒன்றாம் தேதி வெளியாக இருக்கும் ‘மங்கை’ என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளர்தான் இந்த ஜாபர் சாதிக். மேலும் இயக்குனர்அமீரை வைத்து இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை தயாரித்து வந்தார். இந்த படத்தில், இவரது  சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களும்  இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவர்கள் போதைப்பொருள் கடத்தலில் சிக்கியதால் தற்போது அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கும்பலின்  தலைவனாக  செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த மூன்று பேரும் சேர்ந்து தான் சர்வதேச போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக மத்திய போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்துள்ளார்களா? என்னென்ன திரைப்படங்களில் முதலீடு செய்துள்ளார்கள், எந்தெந்த படத்திற்கு பைனான்ஸ் செய்துள்ளார்கள்? வேறு எங்கெல்லாம் சொத்துக்கள் வைத்துள்ளார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபருடன் சினிமாவைச் சேர்ந்த வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இவர்களுக்கு டெல்லியைத் தாண்டி வேறு எங்கெல்லாம் போதைப் பொருள் மையங்களை வைத்துள்ளனர் என்பது குறித்தும், இவர்களுக்கு வேறு கடத்தல் கும்பல்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் சைபர் கிரைம் தொழில்நட்ப நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இவர்கள் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஹவாலா மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத்துறையினரும் விசாரணையை கையில் எடுத்தள்ளனர். இதையடுத்து முக்கிய குற்றவாளிகளான ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் தலைமறைவாகி உள்ளனர்.  தலைமறைவான ஜாபர் சாதிக் உள்ளிட்ட மூவரும் சிக்கினால் இந்த வழக்கில் பல முக்கிய நபர்கள் சிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒருவரே, இத்தனை  ஆண்டுகளாகச் சென்னையிலிருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது திமுக அரசுமீதும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு துறையினர், ஜாதிக்கை தேடி வருகின்றனர். அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் ஆஜராகாத நிலையில், அவரது வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர்.