சென்னை: தமிழ்நாட்டைச்சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி, ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் வழக்கை விசாரணை நடத்தி வந்த, என்.சி.பி. துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங்கிற்கு எதிராக திமுக உள்பட பல பகுதிகளில் இருந்தும் புகார்கள் சென்றன. இதையடுத்து இந்த புகார்களை விசாரிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டு உள்ளது.
கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி டெல்லியில் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ ரசாயன பொருட்களை மத்திய தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் சினிமா தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், முஜிபுர், முகேஷ், அசோக்குமார், சதானந்தம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஞானேஷ்வர் சிங், கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு 3,500 கிலோ போதைப் பொருளை ஜாபர் சாதிக் கடத்தியிருப்பது தெரியவந்துள்ளதாக கூறினார். இதையடுத்து, ஜாபர் சாதிக்கின் வீடு, அலுவலகம் மற்றும் இயக்குநர் அமீரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருமானத்தை என்ன செய்தார்கள்?..யாருக்கு கொடுத்தார்கள் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக்கின் நண்பர்கள், இயக்குனர் அமீர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்படும் என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஞானேஷ்வர் சிங் கூறியிருந்தார்.
இது அரசியல் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜாபர் சாதிக் தயாரித்த திரைப்படத்தை இயக்கியது டைரக்டர் அமீர் என்றாலும், அந்த படத்தை வெளியிட்டது, அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி. இதனால், இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த விஷயத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஞானேஷ்வர் சிங் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வாக திமுக உள்பட சில அமைப்புகள் புகார் கூறின.
ஞானேஷ்வர் சிங் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது அரசியல் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. மேலும் ஞானேஷ்வர் சிங் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ளவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும் மத்திய உள்துறை செயலருக்கும், என்.சி.பி. தலைமை இயக்குநருக்கும் புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஞானேஷ்வர் சிங் மீதான புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என தேசிய போதை பொருள் தலைமையகம் அறிவித்து உள்ளது. ஞானேஷ்வர் சிங்க்கு இணையான பொறுப்பில் உள்ள மேற்கு மண்டல துணை தலைமை இயக்குநர் மணீஷ்குமார் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், போதை பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர்சாதிக் மற்றும் 5 பேருக்கும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த 2ஆம் தேதி உத்தரவிட்டது. பின்னர் அது மேலும் 4 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இன்று (20ஆம் தேதி) குற்றப்பத்திரிகை மீது விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது