நெல்லை

ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு நெல்லையில் நாளை முதல் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடெங்க்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.   விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் ராகுல் காந்தி தமிழகம் வந்து அன்றைய தினம் நெல்லையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார்ப் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.

ராகுல் காந்தியுடன் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்

எனவே நெல்லை மாநகர் முழுவதும் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 13-ஆம் தேதி காலை 6 மணி வரை 2 நாட்கள் நெல்லை மாநகர பகுதி முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.