டெல்லி

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தனது 10 ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வரும் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் பல்வேறு மாநிலங்களில் தங்கள் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று பா.ஜ.க.வின் 10-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்டியலில் 8 புதிய வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே மேற்கு வங்க அசன்சால் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் பவன் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள பட்டியலின்படி, அசன்சால் தொகுதியில் பவன் சிங்கிற்கு பதிலாக எஸ்.எஸ்.அலுவாலியா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.