உத்தரகண்ட் மாநிலம் ரூர்கி அருகே நேற்று அதிகாலை நடந்த சாலைவிபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார்.

டெல்லியில் இருந்து ரூர்கி வழியாக தனது சொந்த ஊரான டேராடூனுக்கு சொகுசு காரை ஒட்டிச் சென்றார் ரிஷப் பண்ட். அதிகாலை 5:30 மணியளவில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது எதிரே ஹ்ரிதுவாரில் இருந்து ஹரியானா மாநிலம் பானிபட் சென்று கொண்டிருந்த ஹரியானா அரசு பேருந்தின் ஓட்டுநர் சுஷில் குமார் எதிர்புறம் கார் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதை கவனித்தார்.

இதனை அடுத்து பேருந்தை நிறுத்திவிட்டு சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜித் இருவரும் கார் அருகே சென்றபோது விபத்தில் சிக்கி ரிஷப் பண்ட் கார் அருகே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை அங்கிருந்து மீட்டு அருகில் தூக்கி வந்த சில வினாடிகளில் கார் தீப்பற்றி எரிந்து முழுவதும் சாம்பலானது.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிகழ்வில் ரிஷப் பண்டை காப்பாற்றிய ஓட்டுநர் சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜித் குறித்து இணையத்தில் வைரலானது.

இதனை அடுத்து அவர்கள் இருவருக்கும் ஹரியானா போக்குவரத்து துறை அதிகாரிகள் சான்றிதழ் வழங்கி கௌரவித்ததோடு சரியான நேரத்தில் துரிதமாக செயலாற்றிய அவர்களின் மனிதாபிமானமிக்க செயலுக்காக அரசு சார்பில் அவர்களுக்கு விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.