சென்னை: கொளுத்தும் கோடை வெயில் காரணமாக, தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது, அக்டோபர் வரை தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர்வாரியம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொதுமக்கள் குடிநீருக்காக அல்லல்படும் நிலையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் விறுவிறுவென குறைந்து வருகிறது. இதனால், சென்னையிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அனைவருக்கும் போதுமான குடிநீர் கிடைக்குமா சென்னைவாசிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் நடைபெறும் என குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பை கணக்கிட்டு குடிநீர் வாரியம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு ஏற்ப மாநகரின் கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகிய 5 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 111 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் நிலையில், சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித தங்கு தடையுமின்றி குடிநீர் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.