மேட்டூர்

மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது.

ஆண்டு தோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கால்வாய் பாசனத்திற்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்துக் குறித்த காலத்திற்கு முன்னதாகவோ அல்லது கால தாமதமாகவோ தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு டெல்டா பாசனத்திற்குக் குறித்த நேரமான ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

சென்ற ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆண்டு அணையின் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. சென்ற ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. ஆனால் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.32 அடியாக இருந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 கன அடியாகக் குறைந்துள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  நேற்று மாலை அணை நீர்மட்டம் 54 அடியாகச் சரிந்த நிலையில், அணையின் பண்ணவாடி பரிசல் துறை நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த ஜலகண்டேசுவரர் கோவில் மற்றும் நந்தி சிலை தற்போது தண்ணீருக்கு வெளியே நன்றாகத் தெரிகிறது.

தற்போதைய மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்தாண்டில் இருந்த நீர் இருப்பை விட இந்த ஆண்டு அணை நீர் இருப்பு 50 சதவீதம் குறைவாகவே உள்ளது.  ஆகவே தென்மேற்கு பருவமழை குறித்த நேரமான ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கினால் மட்டுமே பாசனம் மற்றும் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அணையின் நீர் இருப்பை கணக்கிட்டுப் பார்க்கும்போது குடிநீர்த் தேவையை முற்றிலும் பூர்த்தி செய்ய முடியுமா? என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.  மேட்டூர் அணையின் மூலம் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.