சென்னை: மக்கள் கூடினால், கொரோனா பரவும் என்று கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதில் மட்டும் தீவிர அக்கறை எடுத்து வருகிறது. குடிமகன்கள் கூடினால் கொரோனா பரவாது என்பது தமிழகஅரசின் கொள்கை போல தெரிகிறது.

மாநிலத் தலைநகர் சென்னையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி இன்று திறக்கப்படுகிறது.

கொரோனாவால்  பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில், கடந்த ஒரு வாரமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த இரு நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இன்று முதல் சென்னையில் மதுபானக் கடைகளை திறக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான விற்பனை படுஜோராகவும் இருக்கிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சென்னையிலும் டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு வரும் குடிமகன்களை ஒழுங்குபடுத்தும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. சமூக இடைவெளியுடன் குடிமகன்கள் நிற்க வேண்டும் என்பதற்காக்க இடைவெளி வளையங்கள், தடுப்புகள் போடப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் குடிமகன்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க மைக்செட்டுகளும் கட்டப்பட்டிருக்கின்றன. குடிமகன்களின்  கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசாரும் குவிக்கப்பட உள்ளனர்.

கொரோனா பாதிப்பிலும் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குடி மகன்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது.

“டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணியவேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என்று அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.