சென்னை: மகிழ்ச்சீஈஈஈஈஈ மக்களே! உப்பு தின்னால் தண்ணீர் குடிக்கணும் என்று சிலிண்டர் விலை உயர்வு குறித்து பீட்டர் அல்போன்ஸ் காட்டமாக டிவிட் பதிவிட்டு உள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக ஆட்சிகிக்கு வந்தது முதல் சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்றால் பொதுமக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ள நிலையில், அதுகுறித்து சிந்திக்காத மோடி அரசு, எரிபொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில், தற்போது இன்று மேலும் ரூ.25 அதிகரித்து, ரூ.900-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்துள்ளது. கடந்த 8 மாதத்தில் மட்டும் ரூ.285 அதிகரித்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அதில், ‘ஒரே ஆண்டில் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்குசுமார்₹300 கூட்டிய சாதனை மன்னர் சரித்திரநாயகர் மோடிஜிக்கு நன்றி. மிக அதிகமாக விலை உயர்த்திய அரசுகளுள் முதலிடம் பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளார். மகிழ்ச்சீஈஈஈஈஈ மக்களே! உப்பு தின்னால் தண்ணீர் குடிக்கணும்!’ என பதிவிட்டுள்ளார்.