புதுச்சேரி:  திமுகவின் புதுச்சேரி மாநில அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமாரின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பேசியபோது, புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி வரவேண்டும் என கூறினார்.

புதுச்சேரி மாநில திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார் இல்லத் திருமண விழா, இன்று காலை நடைபெற்றது. இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை  புதுச்சேரி சென்றார். அவரை, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் வழிநெடுகிலும் அவருக்கு  திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மணமகனிடம் தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். பின்னர் அங்கு சிறப்புரை ஆற்றியவர்,  புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசமே உண்டு. கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது.

திராவிட இலக்கியத்தின் தலைநகரம் என புதுச்சேரியை கூறலாம். ஆளுநர் ஆட்டி படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் திமுகவின் ஆட்சி நிச்சயம் மீண்டும் அமையும். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்.  புதுச்சேரியில் தற்போது நடக்கும ஆட்சி மக்களுக்காக நடைபெறவில்லை.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.