காதல் பிழைப்பு கும்பலும் காதலர் பாடும்…! ஏழுமலை வெங்கடேசன்

Must read

காதல் பிழைப்பு கும்பலும் காதலர் பாடும்…!

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

திரௌபதி என்ற படம் டிரெய்லர் வெளியான பின், சமீபமாய் இது தொடர்பாக கருத்து கேட்டு தொடர்ந்து நச்சரிப்புகள். நாம் புதுப்படம் எதையும் பார்ப்பதில்லை..தியேட்டருக்குபோய் 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனாலேயே விமர்சனம் என்ற பெயரில் எதையும் சொல்லுவதில்லை..

திரௌபதி படம் எப்படி இருக்குமோ அது பற்றி நமக்கு தெரியாது. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஆணவக் கொலை, நாடகக்காதல் என்ற இரண்டு வார்த்தைகள் சமீபமாக ஆவேசத்துடன் தாண்டவமாடுகின்றன..அதனால் அது பற்றி சொல்லவேண்டியுள்ளது.

பிள்ளைகள் எல்லையை தாண்டுவது ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று மனநிலை வந்துவிட்டால், கொன்று போடுவதற்கு யாருக்குமே உரிமையில்லை. ஆனால் தலையை முழுகிவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம். எப்போதுமே இதுதான் நம்முடைய நிலைப்பாடு. நமக்கு வீட்டுக்குள்ளும் பொதுவெளிக்கும் ஒரே அளவுகோல்தான்.

அடுத்து நாடகக்காதல் சமாச்சாரம்.. இதற்குள் போவதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியே ஆகவேண்டும்.

பெரும்பாலும், எந்த சாதி மத சமூகமாட்டும். வெறி பிடித்துப்போயோ அல்லது பற்றின் காரணமாகவோ ஒற்றைத்தலைமையை ஏற்றுக்கொள்ளவே கொள்ளாது சுய விருப்பத்தின் அடிப்படையில் பல பிரிவுகளை சார்ந்தே இருக்கும்.

ஒரு சமூகத்தை அடிப்படையாகக்கொண்டு சாதி சங்கமோ அரசியல் கட்சியோ தோன்றி இயங்கினால் அதில் ஒட்டுமொத்த சமூகமும் வந்துவிடுமா என்ன? ஒரே சமூகத்தினர் பல்வேறு அரசியல்கட்சிகளிலும் விதவிதமான சங்கங்களிலும் செயல்படுவார்கள். அதேபோல எல்லா சாதி, மத இனங்களிலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களுக்கும் இருப்பார்கள். அதனால்தான் எந்த ஒரு சாதி மத இனத்தையும் ஒட்டுமொத்தமாக குறிப்பிட்டு விமர்சிக்கவே கூடாது.

இந்த அடிப்படையில்தான் மறுபடியும் சொல்கிறோம். நாடகக்காதல் என்ற சொல்லாடலை வைத்து.. ஒட்டு மொத்த ஒரு சமூகமே அப்படித்தான் அவர்களுக்கு அதை விட்டால் வேறு பிழைப்பே கிடையாது என்பதுபோல் நினைப்பபதைவிட கேவலமான மனநிலை வேறு எதுவும் இல்லை.

காரணம், திட்டமிட்ட குற்றங்களை செய்பவர்கள் உலகில் எல்லா சாதி மத இனங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள். அதுவும் சொற்ப அளவில்.. .. அப்புறம், பலரும் நினைப்பதுபோல் நாடகக்காதல் என்பது ஒரே மாதிரியான கோட்பாட்டில் நடக்கும் பெரும்பான்மை அம்சம் அல்ல..

ஏதோ குடோன் வைத்துக்கொண்டு, ஜீன்ஸ், கூலிங்கிளாஸ், டீசர்ட், பைக் போன்றவற்றை கொடுத்து, போய் வசதியானவன் வீட்டு பெண்ணை மயக்கு என்று சொல்லமாட்டார்கள்.. திட்டமிட்டு மாற்று சமூக பெண்களை வளைப்பது என்பது, நாம் கேள்விப்பட்ட வரையில் மிக மிக சொற்பமே. நமக்கு இந்த சீன் மிகைப்படுத்தபட்ட மாதிரியே தெரிகிறது.

சில சம்பவங்களில் நேரடியாகவும், மற்ற சம்பவங்களின் மூலம் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் சொல்கிறோம். நாடகக்காதல் கும்பல் என்பதைவிட காதலிப்பவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் கும்பல் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அத்தகைய சம்பவங்களின் பின்னணி முகமே முற்றிலும் வேறு. அது தனி நெட்வெர்க். கத்தி, துண்டு, காக்கி, கறுப்பு என பல்வேறு தலைகளின் பங்கு அதில் உண்டு.

மாற்று சமூகத்தின் வசதியான பெண்ணை ஒருவன் காதலிக்க ஆரம்பிக்கிறான் என்று தெரிந்ததுமே, இதற்காகவே காத்திருக்கும் ஒரு காதல் பிழைப்பு கும்பல், கூப்பிடாமலேயே ஓடிவந்து அவனுக்கு மனோ பலம் கொடுக்கும் வேலையை லைட்டாக ஆரம்பிக்கும். (காதலி, தலைகாய்ந்துபோனவன் வீட்டு பெண் என்றால் பெரும்பாலும் இந்த கும்பல் கண்டுகொள்ளவே கொள்ளாது)

அதாவது விபத்தில் அடிபட்டு அரசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் உடனே ஓடோடிவந்து, வழக்கு நடத்தி இன்ஸ்யூரன்ஸ் வாங்கித்தர ஓரு பட்டாளமே ஈ மொய்க்கும். கொஞ்சம் பணத்தைக்கூட கையில் திணிக்கும். அதேமாதிரிதான் இதுவும்..

தம்பி நீ தைரியமா மூவ் பண்ணு.. நாங்களும் நம்ம ஏரியா தலையும் உனுக்கு பலமா இருப்போம் என்று நிபந்தனையற்ற ஆதரவைத் தருவர்கள். அடிதடி, போலீஸ் கோர்ட்டுன்னு எதுவரைக்கும்போனாலும் நாங்க இருப்போம் நீ கவலையா படாதே என்பார்கள்.

காதலிக்கும் பையனும் ஒரு விதமான பயத்தில் இருப்பார் என்பதால் இந்த திடீர் ஆதரவு நல்லதா கெட்டதா என்றே யோசிக்க மாட்டார்..

பெண் வீட்டு சொத்து மதிப்பு, சம்மந்தப்பட்ட காதலனுக்கு தெரிகிறதோ இல்லையோ, நிச்சயம் இந்த கும்பல் முன்கூட்டியே திரட்டிவைத்துவிடும். அதிலும் பெண் பெயரில் பதிவான சொத்துக்கள் தனியாக இருந்தால், கும்பலுக்கு தனி உற்சாகமே வந்துவிடும்.

பையனிடம் இதமாக பேசிப்பேசி ஒரு கட்டத்தில் அவர்கள் சொல்வதை கேட்டே நடந்தே ஆகும்படியான நிலைக்கு கொண்டுபோய் விடுவார்கள்.

ஒரு கட்டத்தில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் என்ற நிலைக்கு காதலர்கள் வரும்போது, இந்த கும்பல் சட்டம் பணம் உள்பட அத்தனை உதவிகளையும் கிடுகிடுவென செய்யும், உற்ற நண்பர்கள்கூட அப்படி செய்ய மாட்டார்கள்.. அப்படியொரு பாசம் காட்டும் இந்த கும்பல்.

இதன்பிறகுதான் சிக்கல்,

ரிஜிஸ்ட்டர் மேரேஜ் முடிந்ததுமே, காதல் கம் புதுமண ஜோடி சுதந்திரமாக குடும்பமெல்லாம் நடத்தவிட முடியாது. இந்த கும்பலின் கண்ட்ரோலுக்கு போயே ஆக வேண்டும். இல்லையென்றால் கதையே வேறு மாதிரி போகும். ஏம்பா, உனக்காக நிறைய செலவு செய்திருக்கோம், தலைக்கு வேறு ஏதாவது கவனிக்கணும். பெண் வீட்டில் கேட்டு வாங்குப்பா.. இல்லையென்றால் நாங்கள் போய் பேசிக்கொள்கிறோம் என்பார்கள்.

அடுத்த டுவிஸ்ட் இன்னும் இருக்கு.. புதுமண ஜோடியே, பெற்றோர் பக்கம் எட்டிப்பார்க்க விரும்பாத நிலையில், இந்த கும்பல் பெண் வீட்டாரை தொடர்பு கொள்ளும். சேர்த்து வைப்பதற்காக அல்ல.. பையனை விரட்டி விட்டு உங்கள் பெண்ண உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறோம் என்று ஆரம்பிப்பார்கள்.

சேர்த்து வைப்பதால் கிடைப்பதைவிட பிரித்து அனுப்புவதால் கிடைக்கும் சன்மானம் அதிகமாக கிடைக்கும் இதற்கான காரணம்.

இதற்கு ஏற்ற மாதிரி சில சம்பவங்களில், பெண்ணை எங்களிடம் திருப்பி அனுப்புங்கள். அதற்கு என்ன வேண்டுமோ செய்கிறோம் என்று பெற்றோரே சொல்லுவார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. உயிரை மட்டும் காப்பாத்திடுங்க டாக்டர் என்று வலியப்போய் வாய்ப்பை தரும் மொமெண்ட். அது இன்னும் வசதியாக போய்விடும் இந்த கும்பலுக்கு.

பேரம் நடக்கும், நடக்கும் தொடர்ந்து நடக்கும். எதிர்பார்த்ததை பெற்றோர் கொடுக்க தயாராக இருந்தால், காதலன் பக்கம் லைட்டா இந்த கும்பல் டார்ச்சை திருப்பும்.. தம்பி பேசிப்பார்த்தோம் சரிவரலை. வேற மாதிரி முடியும் போல தெரியுது, நீ கையெழுத்து போட்டு குடுத்துட்டு கிளம்பு. என்று சொல்லும்.

இதுவரை உதவிய கத்தி, துண்டு ,காக்கி, கருப்பு என எல்லாமே இதே தொணியில் சொல்லும். அதான் சொல் றாங்க இல்லை கேட்டு அது மாதிரி நடந்துகிட்டு பொண்ணை விட்டுட்டு கிளம்பு தம்பி.. இல்லைன்னா, வேற மாதிரி நடந்து, அனாவசியமா நீ உள்ளே போகவேண்டியிருக்கும். அந்த அக்கறையிலதான் சொல்றோம்.

இதற்குபிறகு பெண்ணுடன் மேற்படி காதல் கணவன் வாழ நினைத்தாலே முயன்றாலே அது நடக்குமா என்பது சந்தேகமே..

காதல் பிழைப்பு கும்பல் தலையீடு என்று கூறப்படும் சம்பவங்களில், கூர்ந்து பார்ந்தால் பெரும்பாலான ஜோடிகள் பிரிக்கப்பட்டே இருப்பார்கள். இதில் முக்கால்வாசி கைங்கர்யம் இந்த கும்பலுடையதாகத்தான் இருக்கும். இதையும் மீறி காதல் ஜோடி வாழுகிறது என்றால், பெண் வகையில் கிடைக்கும் சொத்து அடிப்படையில் ஏதாவது ஒரு அமௌண்ட் செட்டில் செய்தால் மட்டுமே முடியும்..

ஒருவனை காதலன் என்ற போர்வையில் சகல விதங்களிலும் தயார்படுத்தி இயக்கும் நெட்வெர்க் அல்ல அது. வசதியான பெண்ணை ஒருவன் காதலிக்கிறான் என்று தெரிந்துகொண்டால், உடனே அவனை பின் தொடர்ந்து தம் வசப்படுத்தி, அவன் வாழ்க்கையை பஞ்சாயத்தாக்கி ஏகப்பட்ட தொகையை பார்க்காமல் போகவே போகாது..

பெண் வீட்டாரே, மாற்று  சமூக பையனை ஏற்றுக்கொண்டாலும், என்ன உங்களுக்குள்ளயே எல்லாம் சகஜமா முடிச்சிக்கலாம்னு பார்க்கறீங்களா என்றும் அதட்டலாக கேட்கும்..

இந்த கும்பல்களை பற்றி முதலில் பையன்கள்தான் தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும் இரண்டாவது, பெண்ணை மீட்டுக்கொண்டு வந்து தருகிறோம் என்று சொன்னால் பெற்றோர் ஆர்வம் காட்டக்கூடாது, நாங்கள் ஏற்கனவே தலையை மூழ்கிவிட்டோம். அவளுக்கும் எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. ஆகையால் அவள் தொடர்பாக எந்த பேச்சையும் எடுத்துக்கொண்டு இனிமேல் யாரும் வராதீர்கள் என்று திட்டவட்டமாக சொல்லிவிடவேண்டும்..

டெம்போவெல்லம் வெச்சி கடத்தியிருக்கோம், நாலாயிரமாவது போட்டு குடுங்க என உள்ளத்தை அள்ளித்தா பட காமெடி ரேஞ்சுகும் இறங்கும். எவ்வளவு நேரம் கால்கடுக்க காத்திருந்தாலும் கெட்டி சட்னியோடு இரண்டு இட்லிகூட கிடைக்காது என்பதை வானத்தைப்போல பட ஓட்டல் காமடிபோல உணர்த்த ஆரம்பித்தால்தான், இனி வேறு வழியில்லை என காதல் பிழைப்பு கும்பல் களைப்பில் கலைந்துபோக தீர்மானிக்கும்..

ஊரையோ ஒட்டு மொத்த உற்றார் உறவினர்களையோ ஒன்று கூட்டி பதட்டமாக்காமல் பார்த்துக்கொள்வது முதல் படி.

சாட்சிகாரன் கால்ல விழுறதை விட சண்டைக்காரன்காலிலேயே விழுந்து பேசி சுமூக முடிவை எட்டிவிடுவது நல்லது என்ற தெளிவான சிந்தனை காதல் ஜோடியின் இரு வீட்டாருக்கும் இருந்துவிட்டால், இதுபோன்ற காதல் பிழைப்பு கும்பல்களுக்கு வேலையே இருக்காது..

காதலை தாண்டி கல்யாணத்திற்கு அப்புறம்தான் நிஜ வாழ்க்கை இருக்கிறது. அது எப்படி இருக்கும் என்பதை காதலிப்பவர்கள் புரிந்துகொண்டால், காதல் திருமணம் வெற்றிகரமாக போகும்.

அப்படியொரு விஷயம் இருக்காது என்று கனவுலகிலேயே சஞ்சரித்தால், வெகு விரைவில் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க தெரியாமல் மனவேறுபாடு ஏற்படுவது உறுதி..

More articles

Latest article