முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை மு.க.ஸ்டாலின் ஆதாரமாகக் காட்டுகிறார் என்றும், மூல ஆவணங்கள் எங்கே ? என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்தை அண்மையில் பார்த்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதை வெகுவாக பாராட்டியிருந்தார். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என்றும் இது படம் மட்டுமல்ல பாடம் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று முன்தினம் தனது டுவிட்டரில், அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மு.க ஸ்டாலின் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என விமர்சனம் வைத்திருந்தார். இதனை தொடர்ந்து ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு நேற்று விளக்கமளித்த மு.க ஸ்டாலின், முரசொலி இடம் தொடர்பான நகல் ஆவணத்தையும் டுவிட்டரில் ஆதரமாக வெளியிட்டு, அரசியலில் இருந்தே ராமதாஸும், அவரது மகனும் விலக தயாரா ? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் விளக்கத்திற்கு, தற்போது பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பதில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் கணக்கில்,
1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?
2. முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?
3. முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?
4. நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில் தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை!
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.