சென்னை

பாட நூல்களில் சாதிப் பெயர்களைத் தமிழக அரசு நீக்கியதற்கு பாமக தலைவர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழக அரசினால் புதிய பாடப் புத்தகங்கள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தன. அந்தப் பாடப்புத்தகங்களில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிடும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம்பெற்றிருந்த சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

குறிப்பாகப் பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில், பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பில் உள்ள பகுதியில், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதர் என்று மட்டும் அச்சிடப்பட்டு அவருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரைத் தமிழக அரசு நீக்கியுள்ளது.

இதைப் போல் தமிழக அரசு பாடநூல் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள மற்ற நூல்களிலும், தலைவர்களின் பெயர்களில் பின்னால் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமக தலைவர் ராமதாஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   அவர் தனது அறிக்கையில்,  “பாடநூல்களில் இடம் பெற்றிருக்கும் தலைவர்களின் பெயர்களில் உள்ள சாதியை நீக்குவது புரிதல் இல்லாத செயலாகவே தோன்றுகிறது  சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும், இத்தகைய நடவடிக்கைகள் சாதிக்கு பதிலாக அடையாளத்தைத் தான் அழிக்கும்” எனக் கூறியுள்ளார்.