சென்னை:
நேரடியாக அல்லாமல் கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயர் பதவிக்கு நேரடியாகத் தேர்தல் நடத்தும் முறைக்கு முடிவு கட்டி, மறைமுகத் தேர்தல் மூலம் மேயரை தேர்வு செய்வதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் பிற்போக்குத்தனமானதாகும்.
பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்பாலிகா சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் 1996 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தேர்தல்களில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஆகிய இரு பதவிகளைத் தவிர மீதமுள்ள அனைத்துப் பதவிகளும் நேரடித் தேர்தல் மூலமாகவே நிரப்பப்பட்டு வந்தன. 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிகளையும் மறைமுகத் தேர்தல் மூலம் நிரப்பும் வகையில் சட்டத்திருத்தம் செய்தது.
2011 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்கள் அனைவருமே நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்தது. ஆனால், அதே அ.தி.மு.க. இப்போது மேயர்கள் மட்டும் மறைமுகத் தேர்தலில் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று கூறி சட்டத் திருத்தம் கொண்டு வருவது விந்தையாக உள்ளது.
சில மாநகராட்சிகளில் உறுப்பினர்களின் ஆதரவு மேயருக்கு அவ்வளவாக இல்லை என்பதால் மாமன்றங்கள் முறையாக செயல்படுவதில்லை என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், அதைக் கருத்தில் கொண்டே மாநகராட்சி உறுப்பினர்கள் மூலம் மேயர்களை தேர்வு செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்கத்தை ஏற்க முடியாது.
கடந்த 2011 ஆம் ஆண்டில் மேயர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் முறையை மாற்றி நேரடியாக தேர்வு செய்யும் வகையில் அதிமுக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. 2011-ஆம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி இதற்கான சட்டத் திருத்த முன்வரைவை தாக்கல் செய்து பேசிய அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி. முனுசாமி,‘‘ மாநகராட்சி மேயர்கள் மறைமுகமாக தேர்வு செய்யப்படுவதால் மாநகராட்சி உறுப்பினரே மேயராக தேர்வாகிறார். அவ்வாறு தேர்வாகும் மேயர் ஒட்டுமொத்த மாநகராட்சிக்கும் மேயராக செயல்படாமல், தாம் தேர்வான வட்டத்திற்கு மட்டும் மேயராக செயல்பட்டு அங்கு அதிக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.
அதுமட்டுமின்றி, மாநகராட்சி மேயர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படும் போது சிறப்பான நிர்வாகத்தை வழங்கவும், மக்களுக்கு விரைவாக சேவைகளை வழங்கவும் வாய்ப்பு ஏற்படும்’’ என்று கூறியிருந்தார். இப்போது மேயர்களை மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க ஆட்சியாளர்கள் முடிவு செய்திருக்கும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன் கே.பி. முனுசாமியால் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து தவறுகளும் மீண்டும் நடப்பதை அரசே ஊக்குவிக்கிறதா? என்ற வினாவுக்கு முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்.
உள்ளாட்சித் தலைவர்கள் அனைவரும் நேரடியாக தேர்வு செய்யப்படுவது தான் முறையானதாக இருக்கும்; அது தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும். பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக 1986 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மாநகராட்சிகள் தவிர்த்து பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் கூட அனைத்து உள்ளாட்சித் தலைவர் பதவிகளும் நேரடியாகத் தான் நிரப்பப்பட்டன. இப்போது மறைமுகமாக நிரப்பப்படும் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் பதவி கூட அப்போது நேரடியாகத் தான் நிரப்பப்பட்டது. அதனால் தான் அப்போது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் மிக வலிமையாக செயல்பட்டன. உள்ளாட்சிகளில் ஜனநாயகமும் தழைத்தோங்கியது.
ஆனால், அதற்கு மாறாக மறைமுகத் தேர்தல் மூலம் மேயர் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவானால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் எதிரணியிலுள்ள மாநகராட்சி உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் கலாச்சாரம் பெருகும். அது ஜனநாயகப் படுகொலைக்கும், ஊழலுக்கும் வழி வகுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இதற்கெல்லாம் மேலாக தமிழகத்திலுள்ள 12 மாநகராட்சிகளில் சென்னை, நெல்லை, திருச்சி, வேலூர், தூத்துக்குடி ஆகிய 5 மாநகராட்சிகளின் எல்லைகளுக்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆளும்கட்சியான அதிமுக கடந்த தேர்தலில் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. அதனால் அம்மாநகராட்சிகளில் மேயர் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாகவே இப்படி ஒரு முடிவை அதிமுக எடுத்திருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அரசின் இந்த முடிவு தமிழகத்திற்கு நல்லதல்ல.
எனவே, மாநகராட்சி மேயர்களை மாநகராட்சி உறுப்பினர்களைக் கொண்டு மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். இப்போது நடைமுறையில் உள்ளவாறு மேயர்களை மக்களால் நேரடியாக தேர்வு செய்யும் முறையே தொடர அரசு வகை செய்ய வேண்டும்’’என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.