சென்னை:
டந்த சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தே.மு.தி.க.வில் களையெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அக் கட்சியின் தொழிற்சங்க பேரவை செயலாளர் எம்.சவுந்திரபாண்டியன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ம.ந.கூட்டணி மற்றும் த.மா.காவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தே.மு.தி.க. படுதோல்வி அடைந்தது. கட்சித் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதயில் போட்டியிட்டு டெபசிட் இழந்தார்.
download
“தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் எதிர்க்கட்சகளுக்கு சாதகமாக நடந்துகொண்டார்கள். அதனால்தான் இப்படி ஓர் தோல்வி ஏற்பட்டது. ஆகவே கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை இருக்கும்” என்று தே.மு.தி.க. வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில் தோல்விக்கு காரணம் என்னவென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களை அழைத்து பேசினார் விஜயகாந்த்.  அதன் அடிப்படையில் தேர்தல் நேரத்தில் கட்சிக்காக உழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசப்பட்டது.
இந்த நிலையில் தேசிய முற்போக்கு தொழிற் சங்க பேரவை செயலாளர் எம்.சவுந்திரபாண்டியனை கட்சியிலிருந்து விஜயகாந்த் நீக்கியிருக்கிறார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் கட்சிக்கே களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டமையாலும்   கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் நடந்து கொண்டதாலும் சவுந்திரபாண்டியன் அவர் வகித்து வந்த பேரவை தொழிற் சங்க செயலாளர் பதவியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்.
இவருடன் பேரவை தொழிற் சங்க நிர்வாகிகள், மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது”  என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
“இப்போதுதான் களையெடுப்பு துவங்கியிருக்கிறது. இன்னும் பலர் நீக்கப்படுவார்கள்” என்று தே.மு.தி.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.