மும்பை: டாக்டர்.எஸ்.நடராஜன் என்ற பெயருடைய கண் மருத்துவர், காஷ்மீரில் பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்ட 200 பேருக்கு இதுவரை கண் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த டாக்டர்.எஸ்.நடராஜனுக்கு வாட்ஸ்ஆப் குழு மூலமாக காஷ்மீரில் உதவி தேவைப்படும் விஷயம் தெரியவந்தது. அவரின் காவல்துறை நண்பரான டி.சிவானந்தன்(முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் & முன்னாள் மராட்டிய டிஜிபி) காஷ்மீரில் சென்று சேவையாற்றுமாறு நடராஜனை ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீரில் கடுமையான வன்முறைகள் நிலவின. அப்போது போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தினர்.

உயிரைப் பறிக்காத இந்த குண்டுகள், மென்மையான தசைகளை ஊடுருவி நாசம் செய்துவிடும். அந்தவகையில், அதிகம் பாதிக்கப்பட்டது கண்களாக இருந்தன.

எனவே, இந்த சமயத்தில் காஷ்மீர் சென்ற அவர், சுமார் 200 பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். பெல்லட் குண்டுகளின் பயங்கரத்தை நேரில் கண்டார்.

தற்போது அவர் தேவைப்பட்டால் மீண்டும் காஷ்மீர் செல்வதற்கு தயாராக உள்ளார். தனது சேவை காஷ்மீர் மக்களுக்கு மீண்டும் தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் அங்கே செல்வதற்கு தயார் என்று கூறியுள்ளார். டாக்டர்.நடராஜன் அகில இந்திய கண் சிகிச்சை சங்கத்தின் தலைவராக உள்ளார்.