சென்னை
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு மருத்துவர் அன்புமணி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நேற்று ராகுல் காந்தி பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பா ம க தலைவர்களில் ஒருவரான மருத்துவர் அன்புமணியும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நண்பர் ராகுல் காந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் மிகவும் முக்கியமான காலக்கட்டத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ள அவருக்கு எனது சார்பிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடியான காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற திருமதி. சோனியா காந்தி அவர்கள் கட்சியை வலுப்படுத்தி அடுத்தடுத்து இரு பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றார். அதேபோல் ராகுல் காந்தியும் காங்கிரசை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று நம்புகிறேன்.
நாட்டில் இன்று தேவைப்படும் சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை உள்ளிட்ட நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ராகுல்காந்தி நிறைவேற்றுவார் என நம்புகிறேன். அவற்றை சாதிக்க வாழ்த்துகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.