டில்லி

திருடப்பட்ட மொபைல்களை கண்டறிந்து அவற்றின் உபயோகத்தை தடுக்க அரசின் தொலை தொடர்புத் துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

சமீப காலமாக மொபைல் உபயோகிப்பாளர்கள் பல விதங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த மொபைல்கள் திருடப்பட்டால் பயனாளிகளின் முக்கிய விவரங்களும் திருடியவர்களால் பயன்படுத்தும் நிலை உண்டாகி உள்ளது.  பலர் தங்கள் வங்கிக் கணக்கையும் மொபைல் மூலமே நடத்தி வருகின்றனர்.    திருடியவர்கள் அந்த கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யவும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு திருடப்பட்ட மொபைல்களை கண்டறிந்து உபயோகத்தை முடக்க அரசு ஒரு திட்டம் தீட்டி உள்ளது.   ஒவ்வொரு மொபைல் போனிலும் ஐ எம் ஈ ஐ என்னும் தனிப்பட்ட 15 இலக்க எண் ஒன்று அளிக்கப்படுகிறது.    தொலைதொடர்புத் துறை  இந்த ஐ எம் ஈ ஐ விவரங்களை அடிப்படையாக கொண்டு ஒரு தனி டேடா பேஸ் ஒன்றை தயாரித்து வருகின்றது.

மொபைல்கள் திருடப்பட்டால் இது குறித்து காவல் துறையிடம் புகார் அளிப்போர் உடனடியாக இதே தகவலை தொலை தொடர்பு துறையிடம் தெரிவிக்க வேண்டும்.  தொலை தொடர்பு துறையினர் உடனடியாக அந்த நம்பரை உபயோகப்படுத்த முடியாதபடி தடுத்து விடுவார்கள்.   எனவே அந்த மொபைலை எந்த ஒரு சேவை நிறுவனம் மூலமும்  பயன்படுத்த முடியாத நிலை உண்டாகும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மொபைலில் உள்ள விவரங்களை மற்றவர் பயன்படுத்த முடியாது என்பதுடன் தற்போது சந்தையில் உள்ள பல போலி மொபைல்களையும் இந்த டேடா பேஸ் மூலம் கண்டறிந்து அவைகளையும் பயன்படுத்தாமல் தடை செய்ய முடியும்.  இந்த திட்டம் ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் பரிசீலனை முறையில் செயல்படுத்தப் பட்டு வெற்றி அடைந்துள்ளது.

இதை ஒட்டி தொலை தொடர்பு துறை இந்த ஐ எம் ஈ ஐ டேடா பேசில் மூன்று வகை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.   அவை வெள்ளை, கிரே மற்றும் கருப்பு பட்டியல்கள் ஆகும்.  வெள்ளை பட்டியலில் உள்ளவர்கள் தங்களது மொபைலை தடை இன்றி பயன்படுத்தலாம்.  கருப்பு பட்டியலில் உள்ள மொபைல்களை பயன்படுத்த முடியாது.  கிரே பட்டியலில் உள்ள மொபைல்கள் பயன்பாடு கண்காணிப்புடன் அனுமதிக்கப்பட உள்ளது.