காட்பாடி:  அமைச்சர் துரைமுருகன்  மற்றும் அவரது மகன் கதிர்ஆனந்த்  வீட்டில் நடைபெற்ற  அமலாக்கத்துறை சோதனை இன்று காலை நிறைவு பெற்றது. முன்னதாக, வீட்டின் கதவுகளை திறக்க யாரும் வராததால், அதிகாரிகள், கடப்பாறை மற்றும் சுத்தியல் கொண்டு, கதவுகளை உடைத்துச்சென்று சோதனை நடத்தினர்.

திமுக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் காட்பாடி தொகுதி திமுக எம்.பி.யுமான கதிர்ஆனந்த் ஆகியோர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதுதொடர்ந்து, நேற்று திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 10க்கும் மேற்பட்டோர், மத்திய காவல் பாதுகாப்பு அதிகரிகளுடன் செந்து காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீடு,  கதிர் ஆனந்த் விடு மற்றும் அலுவலகங்கள்,  கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி என பல இடங்களில்  சோதனை நடத்தினர்.

அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான 5 இடங்களிலும், மற்றும் கதிர் ஆனந்த் நடத்தும் பள்ளி, கல்லுரிகள் மட்டுமின்றி,   அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான காட்பாடி க்கு அடுத்த பள்ளி குப்பம் வீட்டு மற்றும் தோட்டங்களிலும், அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அவரது உறவினருக்கு சொந்தமான சிமெண்டு குடோன் பகுதிகளிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை செய்தனர்.

நேற்று மதியம் தொடங்கிய இந்த சோதனை இன்று காலை 10 மணி அளவில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.  இந்த சோதனையின்போது துரைமுருகன் வீட்டில் இருந்து  முக்கிய ஆவணங்களோ பணமோ சிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனையின்போது,   துரைமுருகன் வீட்டில் இரண்டு அறைக் கதவை உடைத்து சோதனை நடைபெற்றுள்ளது. சாவி இல்லாததால் உடைப்பு கடப்பாரை, உளியால் உடைத்து அதிகாரிகள் சோதனை செய்ததாகக் கூறப்படுகிறது.

அதுபோல, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் நடத்தும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில்  இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும்,  திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக,  அமைச்சர் துரைமுருகன் சென்னையில் இருந்த நிலையில், அவரது மகனான எம்.பி கதிர் ஆனந்த் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார். இதனால், அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் மட்டும் சோதனை தொடங்காத நிலையில் மற்ற இடங்களில் சோதனை நடைபெற்றது. இதனால், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதுதொடர்பாக கதிர் ஆனந்த் தரப்பிலிருந்து இ-மெயில் அனுப்பினால் அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படும் என திமுக நிர்வாகிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காட்பாடி திமுக கிளை செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார், வழக்கறிஞர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர்ஆனந்த் தரப்பிலிருந்து அமலாக்கத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சோதனை தொடர்பான ஆவணங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு வன்னியராஜா, சுனில்குமாரிடம் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகளை திமுகவினர் சோதனை செய்த பிறகே வீட்டினுள் ரெய்டு நடத்த அனுமதித்தனர்.

சுமார் 7 மணி நேர காத்திருப்புக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் பிற்பகல் 2 மணியளவில் சோதனையைத் தொடங்கினர். அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமைச்சரின் தனி அறை பூட்டியிருந்ததால் அந்த அறையின் பூட்டை உடைக்க, இரும்பு கடப்பாரை, சுத்தியல் போன்றவற்றை வீட்டினுள் கொண்டு சென்றனர். நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. நள்ளிரவு 1.20 மணியளவில் சோதனை நிறைவடைந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர்.

இந்த ரெய்டு காரணமாக அமைச்சர் துரைமுருகன் வீட்டின் முன்பு திமுகவினர் ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நேற்று அமைச்சர் துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் 2 பெண்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் வீட்டின் தாழ்வார பகுதியில் 7 மணி நேரம் வரை காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.