டெல்லி: “எங்கள் விவசாயிகளை குற்றவாளிகள் போல் நடத்தாதீர்கள்” அவர்களின் குறைகளை கேளுங்கள்  என பிரபல பொருளாதார நிபுணரும், வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் மகளுமான  டாக்டர் மதுரா சுவாமிநாதன்  மத்தியஅரசை வலியுறுத்தியுள்ளார்.

வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்கின்றனர். அவர்களை டெல்லிக்குள் நுழைய மத்தியஅரசு தடை விதித்து மாநில எல்லைகளில் தடை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், விவசாயிகள் தடையை மீறி டெல்லிக்குள் செல்வதில் தீவிரமாக உள்ளனர்.

போலீஸாரின் தடுப்புகளை மீறி செல்ல முற்பட்ட விவசாயிகள் மீது ஹரியாணா போலீஸார் ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் கலைத்தனர். இந்த நடவடிக்கையின்போது 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்ததாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தடுப்புகளை உடைத்து நொறுக்கியும், கண்ணீர் புகை குண்டுகளை சமாளிக்கும்  நவீன வாயுக் கவசம் உள்ளிட்டவை அணிந்து தடுப்புகளை மீறி டெல்லியை நோக்கி விவசாயிகள் முன்னேறி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், சட்டம் இயற்றும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் தாக்குதலுக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

முன்னதாக, விவசாய அமைப்புகளின் தலைவர்களுடன் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜுன் முண்டா, நித்யானந்த் ராய் ஆகியோர் சண்டீகரில் திங்கள்கிழமை நள்ளிரவு நடத்திய இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மத்தியஅரசு சமீபத்தில் வேளாண் விஞ்ஞானி எம்எஸ்சுவாமி நாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இது தொடர்பான  நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபல பொருளாதார நிபுணரும், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும் டாக்டர் மதுரா சுவாமிநாதன், போராடும் விவசாயிகளை குற்றவாளிகள் போல் நடத்தாதீர்கள், அவர்களின் குறைகளை அரசு கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

டாக்டர் மதுரா சுவாமிநாதன், பெங்களூருவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் பொருளாதார பகுப்பாய்வு பிரிவின் பேராசிரியர் மற்றும் தலைவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உணவுப் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.  வறுமை மற்றும் சமத்துவமின்மை, மனித மேம்பாடு, உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற கடன், பெண்கள் மற்றும் வேலை, குழந்தைத் தொழிலாளர் மற்றும் கல்வி ஆகியவற்றில் பணியாற்றுவது அவரது சிறப்பு ஆர்வங்களில் அடங்கும். அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஹெல்சின்கி மற்றும் இந்திரா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ரிசர்ச் ஆகியவற்றிலும் பாடங்களைக் கற்பித்துள்ளார் .

நீண்ட கால உணவுப் பாதுகாப்பு தொடர்பான இந்திய அரசின் உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர், 2013-2015 வரை ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC) மேம்பாட்டுக் கொள்கைக் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.  

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020-ஆம் ஆண்டில் தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் சுமார் ஒன்றரை ஆண்டு நடத்திய தொடர் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அதுபோன்ற சூழல் மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.