ஆரணி: நான் விவசாயி.. விவசாயிகள் யாருக்கும் பயப்படமாட்டார்கள்.. என்று பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணா மலையையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவை ஒழிப்போம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளதற்கு, அவரை பார்த்து நடந்து கொள்ளுமாறும், ஆணவ திமிரில் பேசாதப்பா என காட்டமாக பதில் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட பாஜக பெரிதும் விரும்பியது. ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக இணையாமல் தனிக்கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதைத்தொடர்ந்து, அதிமுக, பாஜக இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி நரியைப் போன்றவர், அது வாலறிந்த நரி என விமர்சனம் செய்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அண்ணாமலையின் நாக்கு வெட்டப்பட வேண்டும் என்று அண்ணாமலை என்று . முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறிய நிலையில், தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் மிரட்டும் தொனியில் விமர்சித்துள்ளார்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து ,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது. “முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என கூறி வருகிறார், , ஆனால் அதிமுக தான் 40 தொகுதிகளையும் வெற்றி பெறும் என்று கூறியவர்,
ஸ்டாலின் “அதிமுக கட்சியை உடைப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதிமுக தொண்டர்கள் உள்ளவரை இந்த இயக்கத்தை உடைக்க முடியாது. அதிமுக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் . ஒரு ஸ்டாலின் அல்ல, ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் இயக்கத்தை உடைக்க முடியாது” என்றார்
”விவசாயம் என்பது புனிதமான தொழில் அதை கொச்சைப்படுத்தி பேச வேண்டாம். என்னை பற்றி பேசுவதாக கூறி விவசாயிகளை கொச்சைப்படுத்தா தீர்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபொழுது விவசாயிகள் செழிப்பாக இருந்தார்கள். விவசாயிகளுக்கு 9,500 கோடி ரூபாய் பெற்றுத் தந்த ஒரே அரசு அதிமுக அரசு. நான் ஒரு விவசாயி ,விவசாயிகள் யாருக்கும் பயப்படமாட்டார்கள்
ஒரு திட்டத்தை அறிவித்த ஸ்டாலின் அதற்கு ஒரு குழுவை நியமிக்கிறார். 52 திட்டங்களை அறிவித்தார் அதற்கு 52 குழுக்கள் அமைத்துள்ளார் இது திராவிட மாடல் ஆட்சி அல்ல, அல்ல குழு ஆட்சி” என பொதுமக்கள் என கூறுகின்றனர்.
2ஜி யில் ஒரு லட்சத்து 2000 கோடி ரூபாய் ஊழல் செய்து, இந்தியாவிற்கே தலைகுனிவு ஏற்படுத்திய ஒரே கட்சி திமுக கட்சி.
கலைஞரின் ஆட்சி காலத்தில் அரிசியில் ஊழல், பூச்சி மருந்தில் ஊழல் என எண்ணற்ற ஊழல்களை கொண்டுள்ள ஒரே கட்சி திமுக கட்சி
திமுக கட்சி குடும்ப கட்சி என்றும், அதில் கலைஞர் அவருடைய மகன் ஸ்டாலின் அவருடைய மகன் உதயநிதி அடுத்தபடியாக அவருடைய மகன் வர உள்ளார் என்றும் திமுகவில் வேறு யாரும் இல்லையா?, இந்த திமுகவின் கட்சி கம்பெனி போன்று இயங்கி வருகிறது எனவும் திமுகவை குற்றம் சாட்டி எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
கட்டுமானப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல், மணல், கம்பி உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் வீடு கட்டுவது கனவாகவே உள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் பட்டியிலில் கட்டுமானப் பொருட்களை சேர்க்க வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நூல் விலை, மின் கட்டணம் உள்ளிட்ட பிரச்சினையால் தறிகளை எடைக்குப் போடும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்றார்.
இதைத்தொடர்ந்த பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்யத்தொடங்கினார். 2026 தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம் என்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து பேசியவர், “இப்ப புதுசா ஒருத்தர் வந்திருக்கிறார் அண்ணாமலை. 2026 தேர்தலில் அதிமுகவை ஒழிப்போம் என்று அவர் பேசியுள்ளார்.
தம்பி அண்ணாமலை, அதிமுக தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி, உங்க பாட்டனையே பார்த்த கட்சி. உன்னைப்போல் எத்தனையோ பேர் இப்படி கொக்கரித்தார்கள். ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா. அதிமுக மட்டும் இல்லை என்றால் தமிழகம் வளர்ச்சி பெற்று இருக்காது, ஏற்றம் பெற்று இருக்காது.
அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்ததால் தான் இந்த மண்ணில் உள்ள அத்தனை பேரும் நன்மை பெற்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எங்கள் கட்சியையா நீ அழிக்கப் பார்க்கிறாய்?
1998 ல் தாமரைச் சின்னம் என்ற ஒன்று இருப்பதையே ஊர் ஊராகச் சென்று காட்டியதே அதிமுக தான். தாமரை என்றால் எந்த கட்சியின் சின்னம் என்றே தமிழகத்தில் தெரியாமல் இருந்தபோது அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. அப்போது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொரு ஊராக தாமரையை எடுத்துச் சென்று இதுதான் சின்னம் என்று அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
நீ மத்தியில் இருப்பவர்களால் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட கட்சித் தலைவர். எப்போது வேண்டுமானாலும் தலைவர் மாற்றப்படலாம். ஆனால் அதிமுக அப்படியல்ல. இங்கே உழைத்தால் ஏற்றம் பெறலாம். ஆனால் அங்கே, டெல்லியில் நினைத்தால் தலைவராகலாம். அப்படி அப்பாயின்மென்ட்டில் வந்திருக்கிற நீ கொஞ்சம் கவனமாக பேசு. அதிமுக ஒரு மாதிரியான கட்சி. பார்த்து நடந்துக்க.
ஒரு கவுன்சிலராக கூட ஆக முடியவில்லை, எம்எல்ஏ ஆக முடியவில்லை, எம்பியாக முடியவில்லை. நீ வந்து அதிமுகவை ஒழிப்பேன் என்று பேசுகிறாய். பதவி வரும்போது பணிவு வரவேண்டும் என்று பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் பாடியுள்ளார். ஆனால் நீ அப்படி இல்லை. தலைகணத்தில் ஆடுகிறாய். இது நிலைக்காது. மற்றவருக்கு மரியாதை கொடுத்து திரும்ப பெற்றால் தான் மனிதனாக பிறந்தவர்களுக்கு மரியாதை” .
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.