டெல்லி:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையான கடன்களின் தவணைகள் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக, அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
மேலும் கிரெடிட் கார்டு தவணைகளுக்கும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு நிவாரண உதவிகள், நிதிச் சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து உள்ளன.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி தலைவர் சக்திகாந்த தாஸ், அரசு மற்றும் தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும், எல்லா வகையான கடன்களின் தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த கடன் விலக்கு அளிக்கப்பட்ட மாதங்களின் தவணைகளை 3 மாதம் கழித்து கட்ட வேண்டும் என்று கூறியவர், வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் இருந்து 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வாடிக்கையாளர்களின் EMI குறைய வாய்ப்பு உருவாகி உள்ளது.
அனைத்து வகை கடன்களுக்கும் மூன்று மாதம் தவனைகளை கட்ட அவகாசம் வழங்கப்படும். வங்கிகளில் தொழில்துறையினர் பெற்ற தவணைகளை செலுத்த 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுவதாகவும்‘, அதுபோல, 3 மாதங்களுக்கு கடன் தவணை செலுத்தாமல் விடுவதால், அதனை வாராக்கடனாகவும் சேர்த்துவிடக் கூடாது என்று அறிவுறுத்தி இருப்ப தாகவும், இதனால் வாடிக்கையாளரின் சிபில் மதிப்பெண் பாதிக்கப்படாது.
அத்துடன் கிரெடிட் கார்டுகள் மூலம் தவணை செலுத்தவும் 3 மாதம் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் கூறி உள்ளார்.
மேலும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 5.3% இருந்து 2.5% ஆக குறையும் என மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை கணிப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.