நியூயார்க்: ட்ரம்ப் பேச்சை கேட்டு யாரும் கிருமிநாசினியை குடித்து விடாதீர்கள், இறந்துவிடுவீர்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவை குணப்படுத்தும் வகையில் உடலைச் சுத்திகரிக்கும் கிருமிநாசினியை விஞ்ஞானிகள் கண்டறிய முயல வேண்டும் என்று நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந் நிலையில், இது மிக முட்டாள்தனமான, அதேசமயம் மிக ஆபத்தான பரிந்துரை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அப்படியொரு கிருமிநாசினி கண்டிபிடிக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அதை குடித்தால், அவர் கொரோனாவால் இறப்பதற்கு முன்பே அந்த கிருமிநாசினியால் இறந்திருப்பார் என்று இங்கிலாந்திலுள்ள யுனிவர்சிட்டி ஆஃப் ஈஸ்ட் ஆங்கிலியாவின் மருத்துவப் பேராசிரியர் பால் ஹண்டர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் பேச்சை கேட்டு மக்கள் யாரும் கிருமிநாசினியை குடித்துவிட வேண்டாம். அது கூடுதல் ஆபத்தை விளைவிக்கும் என்று விஞ்ஞானிகள்,  மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏற்கெனவே கொரோனா வைரஸ் தொடர்பாக மிக அலட்சியமாக நடந்து வந்ததாக ட்ரம்ப் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சூழலின் தீவிரத்தை உணராமல், அவர் பொறுப்பற்றுப் பேசி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உலகளாவிய அளவில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மிக அதிக அளவில் பரவியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கி உள்ளது. 50,372 பேர் பலியாக, 82,843 பேர் குணமாகியுள்ளனர்.