சென்னை; மத்தியஅரசின் சட்டத்தை மீறக்கூடாது, மத்திய அரசு சொல்வதை தான் கேட்க வேண்டும் – சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ளுங்கள் என குடிமைப்பணி தேர்வை எதிர்கொள்ள உள்ள இளைஞர்களுடன் கலந்துரையாடிய  கவர்னர் ஆர்.என். ரவி கூறினார்.

சென்னை ராஜ்பவனில் இன்று இந்தியா குடிமைப்பணி நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 பேருடன் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடல் நடத்தினர்.  “எண்ணித் துணிக” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில் கலந்துகொண்டவர்களின்  பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தவர், இறுதியில் அவர்களிடையே உரையாற்றினார்.  அப்போது, குடிமைப் பணிகளுக்கு தேர்வாகும் உங்களுடைய பர்சனாலிட்டி மிக முக்கியம். நீங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கவேண்டும். பல அதிகாரிகளையும், மக்களையும் சந்திப்பவர்களாக நீங்கள் இருப்பீர்கள். எனவே, சிரித்த முகமாகவும் இருக்கவேண்டும்.

ஐ.ஏ. எஸ் தேர்வில் இறுதியாக நடைபெறும் நேர்முக தேர்வு என்பது உங்களின் மனத்திடத்தை சோதிக்கும் ஒரு தேர்வு. நீங்கள் திடமாகவும் தீர்க்கமாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் மக்களுக்காக பணியாற்ற உள்ளனர். சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும்.

 

இந்த பணிக்காக ஆண்கள் கோட்சூட் எடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். விரைவில் அதனை எடுத்து அணிந்து பழகுங்கள்.

பெண்கள் எப்படியும் சேலை தான் அணிவீர்கள். சேலை அணியத் தெரியாதவர்கள் சீக்கிரம் அதற்கு பழகிக்கொள்ளுங்கள்.

கேள்விகளுக்கு அவசரமாக பதில் அளிக்க வேண்டாம் நிதானமாக பதில் அளியுங்கள்.

நீங்கள், நீங்கள் தான். நீங்கள் மற்றவர்கள் அல்ல. நீங்கள் மற்றவர்கள் கருத்தை கேட்கலாம். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும்.

உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நன்றாக கேள்வியை உள்வாங்கிக் கொண்டு பதில் சொல்ல வேண்டும்.

இந்திய குடிமை பணியில் சமூக போராளிகளுக்கு இடமில்லை இங்கு மக்களுக்கு குடிமை பணி செயபவர்கள்தான் தேவை. நீங்கள் கருத்தை ஏற்கவில்லை எனறால் அதை மரியாதையாக தெரிவிக்க வேண்டும்.

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பார்வை இருக்கும். உங்களுடைய எண்ணங்களும், பார்வைகளும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதனை அமல்படுத்துவது மட்டும்தான் .
இந்திய குடிமைப் பணி அதிகாரியாக உங்களுடைய கடமை. உங்கள் மனதில் தோன்றும் விமர்சனக் கருத்துகளையெல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்று இல்லை. சமூக ஆர்வலர்கள் வேண்டுமென்றால் அவர்கள் விருப்பப்படி என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம், அவர்கள் நினைத்ததை செய்யலாம். ஆனால், நீங்கள் இந்திய குடிமைப் பணிகள் அதிகாரியாக, அரசின் திட்டங்களையும், எண்ணங்களையும் உங்கள் கருத்துக்கு மாறாக இருந்தாலும் செயல்படுத்தவேண்டும்.

இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை.

ஒரு விஷயத்தைப் பற்றி, ஒரு பிரபலம் கருத்து சொல்கிறார் என்பதால் அது உண்மையாக இருந்து விடமுடியாது. அவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், அது அவருடைய பார்வை அவ்வளவு தான்.

பெண்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும் என்று ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி கூறி வருகிறார். எனவே தான் பெண்களுக்கும் பல சலுகைகளை பிரதமர் முன்னெடுக்கிறார்.

ஜல்லிக்கட்டு ஒரு கலாச்சாரம் சார்ந்த விவகாரம் அதில் நாம் தலையிட முடியாது.

 

ஒன்றிய அரசு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால், அதை அரசியலாக்கும்போது தான் பிரச்சினை ஆகிறது. ஒன்றிய அரசு என்று அழைத்து அவமதிக்கும்போது தான் அது பிரச்சினையை ஏற்படுத்துகிறது. ஒன்றிய அரசு என்ற பிரச்சினை பற்றி தமிழ்நாட்டைத் தாண்டி யாருக்கும் தெரியாது.

 

தனி நாகாலாந்து கேட்கும் நாகா குழுக்களின் எண்ணம் என்பது, நாகா இனத்தின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணம் அல்ல.

இந்தியா என்பது பல கலாச்சாரம், பல இனக்குழுக்கள் உள்ள நாடு. இதில் எந்தப் பகுதியிலும் ஒரே இனத்து மக்கள் மட்டும் வசிக்கிறார்கள் என்று சொல்லி, அந்தப் பகுதியை அவர்களுக்காக பிரித்துக் கொடுக்க முடியாது.

தனி மாநிலம் என்பது அந்த இடத்தில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களின் பெரும்பான்மை கருத்தாக இருக்கவேண்டும்,’’

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:– யு.பி.எஸ்.சி. எந்த மாதிரியான அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறது.

பதில்:- யு.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத்தான் தேடுகிறது. ஒரு சமூக ஆர்வலர் யு.பி.எஸ்.சி.க்கு தேவையில்லை. ஒரு விவகாரம் குறித்து என் கருத்தைக் கேட்டால் அதனை நான் தருவேன். ஆனால், இறுதி முடிவு எனது கருத்துக்கு எதிராக இருந்தாலும், அதனை அமல்படுத்துவதுதான் என் கடமை. என் கருத்துக்கு எதிராக முடிவெடுத்த மேல் அதிகாரியின் முடிவின் மீது நான் கோபப்படமுடியாது.

கேள்வி:- பணமதிப்பு நீக்கம் நல்லதா? கெட்டதா?

பதில்:– உச்சநீதிமன்றம் சொன்ன சட்டப் புள்ளியை நீங்கள் பார்த்தால் அது சரிதான் என்று உங்கள் பதில் இருக்கும். பணமதிப்பு நீக்கத்தின் தாக்கத்தில், சில வணிகங்கள் விநியோகிக்கப்பட்டு விட்டன, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவாக டிஜிட்டல் மற்றும் பல இ-காமர்ஸ்கள் வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தக நாடாக இந்தியா இப்போது உள்ளது. முடிவு எடுக்கும்போது, தற்காலிக தவிர்க்க முடியாதது நடக்கும், சில எதிர்மறை அம்சங்களும் இருக்கும், நீண்ட காலத்தில், பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்கி, மிகப்பெரிய டிஜிட்டல் மொழிபெயர்ப்பு நாடாக மாற்றியுள்ளோம்.

கேள்வி: மாநில அரசும், மத்திய அரசும் இருவேறு கருத்துகள் நிலவும்போது, என்னிடம் கருத்து கேட்கப்பட்டால் நான் யார் பக்கம் நிற்கவேண்டும்?

பதில்: மாநிலஅரசு, மத்தியஅரசு என்று வரும்போது சந்தேகமே இல்லை; இந்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் மத்தியஅரசின் மூலம், மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். அவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.