நியூயார்க்:

டொனால்ட் டிரம்பின் தனது முதல் தகவல்தொடர்பை ‘டொனால்ட் டிரம்பின் டெஸ்க்’ என்ற பெயரில் தலைப்பிட்டு துவக்கியுள்ளார்.

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி 6ம் தேதி, அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும், வன்முறை நடந்து கொண்டிருந்தபோதும், தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் டிரம்ப் வெளியிட்டார்.‌ இதனால் டிரம்ப் வன்முறையை தூண்டியதாகக் கூறி டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தள நிறுவனங்கள் டிரம்பின் சமூக வலைதள கணக்கை நிரந்தரமாக முடக்கின.

இதனால் ஆவேசமடைந்த டிரம்ப், சமூக வலைதள நிறுவனங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இவரது சமூக வலைதள கணக்கை நிரந்தரமாக முடக்கியதை, பேஸ்புக் மேற்பார்வை வாரியம் அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், டிரம்பின் ஆலோசகர் ஜாசேன் மில்லர் கூறுகையில், ‘தற்போது புதிதாக தகவல் தொடர்பு வலைதளத்தை டிரம்ப் தொடங்கியுள்ளார். இந்த வலைத்தளத்தில் உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் டிரம்பின் பதிவுகளுக்கு ‘லைக்’ செய்வது மற்றும் கருத்து தெரிவிப்பதோடு அவற்றை டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்டவற்றிலும் பகிர முடியும்’ என்றார்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் தனது முதல் தகவல்தொடர்பை ‘டொனால்ட் டிரம்பின் டெஸ்க்’ என்ற பெயரில் தலைப்பிட்டு, அவரின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ‘சேவ் அமெரிக்கா’ இணைய பக்கத்தில் கருத்துகளை முதல்முறையாக பதிவிட்டுள்ளார். இதில், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற வலைதளங்களில் பகிரும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.