வாஷிங்டன்

னக்கென ஒரு புதிய வலைத் தளத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தும் அதை ஏற்காமல் சமூக வலைத் தளங்களில் பல பதிவுகளை வெளியிட்டார்.  இதனால் வாஷிங்டனில் கடும் வன்முறை ஏற்பட்டு நாடாளுமன்ற கட்டிடம் அடித்து நொறுக்கப்பட்டது.   இதையொட்டி வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாக டிரம்பின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிவிட்டர் யூடியூப் என் அனைத்துக் கணக்குகளும் மூடப்பட்டன.

அதன்பிறகு டிரம்ப் தனது கருத்துக்களை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு டிரம்ப் தனக்கென ஒரு புதிய வலைத் தளம் விரவில் தொடங்குவார் என அவரது ஆலோசகர் ஜாசேன் மில்லார் தெரிவித்தார்.  தற்போது டிரம்ப் ஒரு புது தகவல் தொடர்பு வலைத் தளத்தைத் தொடங்கி உள்ளார்.   இந்த வலைத் தளத்தில் இனி டிரம்ப் தனது கருத்துக்களை வெளியிட உள்ளார்.

இனி டிரம்ப் ஆதரவாளர்கள் அவருடைய சொந்த வலைத்தளத்தில் அவரை பின்பற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் உள்ளோர் இந்த வலைத்தளம் மூலம் டிரம்ப் கருத்துக்களுக்கு லைக் செய்யவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும் முடியும்.  அது மட்டுமின்றி அவர்கள் டிரம்பின்  பதிவுகளை ஃபேஸ்புக், டிவிட்டர் என அனைத்து சமூக வலைத் தளங்களிலும் பகிர முடியும்.