இந்தியா – இங்கிலாந்துக்கு இடையே விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில், ஆடுகளத்தின் உள்ளே நாய் நுழைந்ததால் இந்திய வீரர் புஜாராவால் சதம் எடுக்க தாமதமானது.
தேநீர் இடைவெளிக்கு 4 பந்துகளே எஞ்சி இருந்த நிலையில், புஜாரா 97 ரன்களுடன் களத்தில் இருந்தார். தேநீர் இடைவெளிக்கு முன் சதம் அடிக்க வேண்டும் என நினைத்த புஜாரவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 57 ஓவரில் இரண்டு பந்துகள் வீசிய நிலையில் நாய் ஒன்று ஆடுகளத்திற்குள் புகுந்தது. இதனால் நடுவர் ஆட்டத்தை நிறுத்தினார்.
நாயை ஒரு வழியாக மைதானத்தை விட்டு வெளியே விரட்டிய பின், மீண்டும் ஆட்டத்தை துவங்கினர். ஆனால், மீண்டும் அதே நாய் உள்ள புதுந்து ஆட்டத்தை தடை செய்தது. நாயை துரத்த நேரம் விரையமானதால், நடுவர் இடைவேளை என அறிவித்தார். இதனால் புஜாரா சதம் அடிக்க முடியவில்லை.
இந்திய அணி தேநீர் இடைவேளையின்போது, 56.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்தநிலையில் 210 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 97, கோலி 91 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். தேநீர் இடைவேளைக்கு முடிந்து களத்தில் இறங்கிய புஜாரா, சூப்பராக சிக்ஸர் ஒன்றை அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார். அவரை தொடர்ந்து, 154 பந்துகளுக்கு கோலி சத்தத்தை பூர்த்தி செய்தார்.
இறுதியாக, இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 4 விக்கெடுகளை இழந்து 317 ரன்கள் எடுத்தது. 119 ரன்களில் புஜாராவும், 23 ரன்களில் ரஹானேவும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 151 ரன்களுடனும் அஸ்வின் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.