சென்னை: ஆன்லைன் ரம்மியால் உயிரிழக்கும், அப்பாவிகளின் உயிரிழப்பை தடுப்பதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் இருவர் பலியாகி உள்ளனர். இதை தடுக்க தமிழக அரசு கொண்டு வந்த சட்டம், உயர்நீதிமன்றத்தால் ரத்து செயப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தொடரும் அப்பாவி மக்களின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமையா புகலா என்ற மாணவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஒன்பதாவது உயிர் ராமையா ஆவார். கடந்த 14-ஆம் தேதி தான் மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் என்ற தனியார் நிதிநிறுவன பணியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்த மூன்றாவது நாளில் அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு உயிர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியிருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.